காலண்டரில் இந்தக் குறியீடுகள் பற்றித் தெரியுமா?
காலண்டரில் இந்தக் குறியீடுகள் பற்றித் தெரியுமா?
"உங்கள் தினசரி காலண்டரில் இருக்கும் மேல், கீழ் மற்றும் சம ரீதியான அம்புக் குறியீடுகள் எதைக் குறிக்கிறது? வாங்க பார்க்கலாம்."
நமது வீட்டில் இருக்கும் தினசரி நாட்காட்டியை கிழிக்கும் போது அதில், மேல் நோக்கு, கீழ் நோக்கு, சமநோக்கு நாள் என்று போட்டு இருக்கும். நாமும் அதனை பார்த்து இருப்போம். கூடவே அதற்குரிய அம்புக் குறியீடும் போடப்பட்டு இருக்கும். இது ஒரு பொருள் செறிந்த குறியீடு. பெரும்பாலும் இது கட்டடம் கட்டுபவர்கள் மற்றும் விவசாயத்தில் இருப்பவர்களுக்கே அதிகம் பயன்படுகிறது. இது பற்றி மேலும் விவரமாக இந்தக் கட்டுரையின் வாயிலாகக் காண்போமா? வாங்க பார்க்கலாம்.
கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.
சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சம நோக்கு நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம். இது மிகவும் சாலச் சிறந்தது.
மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய செடி கொடிகள் அல்லது மரங்களின் விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.
இப்படியாக மேற்படி நாட்கள் பார்த்து அந்தந்த வேலைகளை செய்தால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். அதனால் தான் 'நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!' என்று நம் பெரியோர்கள் கூறுகின்றனர்.