சுனாமி தினம் - Tsunami Day
சுனாமி தினம் - Tsunami Day
"அது டிசம்பர் 25 2004 ஆம் ஆண்டு, உலகத்தின் பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலை கட்டியது. அன்பும், பரிசுப் பொருட்களும், கொண்டாட்டங்களும் எங்கும் மாறி, மாறி பகிரப்பட்டது. "
அந்த நாளின் இரவில், மகிழ்ச்சியுடன் பல சகோதர, சகோதரிகள் விழிகள் மூடி உறங்கச் சென்றனர். அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்காது, துயில் கொண்ட விழிகள் நிரந்தரமாக மூடப் போகிறது என்று.
சரியாக 00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது. அது சாதாரண நிலநடுக்கம் அல்ல.. உலகம் முழுக்க 2,29,866 உயிர்களை ஒரே இரவில் தின்று தீர்க்கப் போகும் நில நடுக்கம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்.
மறுபுறம், இந்த நிலநடுக்கம் உலக வரலாற்றில் இரண்டாவது பெரிய வலிமையான நில நடுக்கம் என்று அறியப்படுகிறது. இப்படியாக ஒற்றை இரவுக்குள் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளை கபளீகரம் செய்து முடித்தது. ஜாதி, மதம், இனம், தேசம் போன்ற பாகுபாடுகள் இல்லாமல் மரணதேவி 2,29,866 உயிர்களுக்கு மாலையிட்டு முடித்தாள்.
ஆம்!
மேற்சொன்ன அந்த நில நடுக்கம் அமைதியான ஆழ்கடலை சீறி எழச் செய்தது. கோரம் கொண்ட ஆழ்கடல் தன் கோபத்தை ஆழிப் பேரலைகளாக வெளிப்படுத்தியது. அதன் விளைவு, உயர அலைகள் வான் முட்ட உயர்ந்தது. உறங்கச் சென்ற பல உயிர்களை மண்ணில் புதைத்தது. அதில் பல, மழலை உயிர்களும் அடக்கம் என்பது வேதனையின் உச்சம். இதனால், எங்கெங்கும் மரண ஓலங்கள் கடல் அலையின் ஓசையையே அமிழ்த்தியது. பலரது கண்ணீர் துளிகள் கடல் நீரை மேலும் உப்பாக்கியது.
"பிரளயம் என்பது இது தானோ?" என்று ஒரு கணம் மனித மனங்களை எண்ணச் செய்து விட்டு, ஏதோ பெரிய சாதனை செய்தது போல், கடல் சில மணி நேரங்களில் அமைதியுற்றது.
இந்தச் சுனாமியால், இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்தப் பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை (சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது. இப்படியாக 26.12.2004 ஒரு கருப்பு ஞாயிறாக தன் ரத்தம் தோய்ந்த கால்த் தடங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்று விட்டது.
'ஆழ்கடலே ஏன் இப்படி மனித இனத்தை வஞ்சித்தாய்?' என்ற ஒற்றைக் கேள்வியுடன். இறந்த உயிர்களுக்கு இந்த சுனாமி தினத்தில் வந்தனம் செய்வோம். இந்தச் சுனாமி தினத்தை அனுஷ்டிப்போம்.