பகுபத உறுப்புகள் , Tamil Grammar, தமிழ் இலக்கணம்
பகுபத உறுப்புகள்:
தமிழ்மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள் ஒன்று பதம் என்பதாகும்.
இலக்கணவகையில் அமைந்த சொற்கள் நான்கனுள், பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப் பொருள்தரும் நிலையில் இருத்தலால் இவற்றைப் பகுபதங்கள் என்பர்.
இடைச்சொற்கள்
உரிச்சொற்கள் பகாப்பதத்திற்குரியவை ஆகும்.
இவற்றுள் பெயர்ப்பகுபதச் சொற்களைக் காட்டிலும் வினைப்பகுபதச் சொற்களே வழக்கில் மிகுதியாக உள்ளன.
சொற்களைப் பொருள்நோக்கிலும் பிரித்து எழுதுவர்.
ஒவ்வொரு சொல்லிலும் உள்ள உறுப்புகள் எவையெவை என்ற வகையிலும் பிரித்து எழுதுவர்.
அவ்வாறு பிரித்து எழுதும்
உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.
அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனப் பொதுவாக ஆறு வகைப்படும்.
ஒரு வினைப்பகுபதத்தில் பகுதியும் விகுதியும் அடிப்படை உறுப்புகளாக உள்ளன.
சில சொற்களில் பகுபத உறுப்புகள் ஒன்றோ இரண்டோ குறைந்தும் வரும்.
சில சொற்கள் ஆறு
உறுப்புகள் பெற்றும் வரும்.
ஒரு பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை என்பவையே பொருள்
தரும் உறுப்புகளாகும்.
பகுதி பெரும்பாலும் சொற்பொருளையும் விகுதி, இடைநிலை ஆகியன
இலக்கணப் பொருண்மைகளையும் தருகின்றன.
இவை மூன்றும் இணையும்போது ஏற்படும் புணர்ச்சி மாற்றங்களே சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.
பகுதி:
* ஒரு சொல்லின் அடிச்சொல்லே பகுதியாகும்.
இதை முதனிலை என்றும் கூறுவர்.
* விகுதி பெறாத ஏவல் வினையாக வரும்.
* மேலும் பகுதி விகுதி எனப் பிரிக்க இயலாததாய் இருக்கும்.
* பாடினான் என்னும் வினைமுற்றை, பாடு + இன் + ஆன் எனப் பிரிக்கலாம். இதில்
' பாடு என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது. இது
போலவே படி, ஆடு, செய், எழுது, நட, ஓடு போன்றவை பகுதியாகவும் விகுதி பெறாத
ஏவல் வினையாகவும் இருக்கின்றன.
* அறிஞர் என்னும் பெயர்ச்சொல்லை அறி + ஞ் + அர் எனப் பிரிக்கலாம்.
இதில் 'அறி' என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது.
* பகுதி சில சொற்களில் ஒற்று இரட்டித்துக் காலம் காட்டும்.
விகுதி:
* ஒருவினைமுற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை
வெளிப்படுத்தும் உறுப்பு விகுதி எனப்படும்.
கொடுத்தான் = கொடு + த் + த் + ஆன்
படித்தாள் = படி + த் + த் + ஆள்
நடந்தது = நட + த்(ந்) + த் + அ + து
இவற்றுள் ஆன், ஆள், து என்பவை விகுதிகளாகும்.
'ஆன்' என்னும் விகுதி உயர்திணை.
ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும் 'ஆள் என்னும் விகுதி உயர்திணை,
பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும் 'து' என்னும் விகுதி அஃறிணை
ஒன்றன்பால், படர்க்கை இடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்பருகிறது.
எழுதுக - எழுது + க
உரைத்த - உரை + த் + த் + அ
செய்தல் - செய் + தல்
படித்து - படி + த் + த் + உ
இடைநிலை:
* பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர்.
* வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையைக் கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை என இருவகைப்படுத்துவர்.
* பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையைப் பெயர் இடைநிலை என்பர்.
கால இடைநிலை:
* ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு கால இடைநிலை அல்லது காலம் காட்டூம் இடைநிலை எனப்படும்.
செய்தான் - செய் + த் +ஆன்
செய்கிறான் - செய் +கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
* இவற்றுள் த், கிறு, வ் என்பன கால இடைநிலைகளாகும். இவை முறையே
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பனவற்றை உணர்த்துகின்றன.
★ இறந்தகால இடைநிலைகள் = த், ட், ற், இன்
★ நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று
★ எதிர்கால இடைநிலைகள் - ப், வ்
★ எதிர்மறை இடைநிலைகள் - ஆ, அல், இல்
எதிர்மறை இடைநிலை:
* எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை
உணர்த்தும் இடைநிலை, எதிர்மறை இடைநிலை ஆகும்.
* ஆ என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும்.
* உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.
ஓடாது - ஓடு + ஆ + து
காணலன் - காண் + அல் + அன்
பேசான் - பேசு + (ஆ) + ஆன்
எழுதிலன் - எழுது + இல் + அன்
பெயர் இடைநிலை:
ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை, பெயர் இடைநிலை ஆகும். ச், ஞ், ந், த், வ் ஆகிய மெய்கள் பெயர் இடைநிலைகளாக வரும்.
தமிழச்சி - தமிழ் + அ + ச் + ச் * இ
இளைஞர் - இளை + ஞ் + அர்
ஓட்டுநர் - ஓட்டு + ந் + அர்
ஒருத்தி - ஒரு + த் + த் + இ
மூவர் - மூன்று + வ் + அர்
சந்தி:
* சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.
* பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு, சந்தி எனப்படும்.
* சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
* புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலைச் சந்தி
என்றும் சொல்வர். ஓர் எழுத்துத் தோன்றுதலைச் சந்தி என்றும், மற்றைய திரிதலையும்
கெடுதலையும் விகாரம் என்றும் வழங்குவர்.
* பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஓன்று சந்தியாக வரும்.
* உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு.
அசைத்தான் - அசை + த் + த் + ஆன்
காப்பார்-கா + ப் + ப் + ஆர்
படிக்கிறார் - படி + க் + கிறு + ஆர்
வணங்கிய - வணங்கு + இ(ன்) + ய் + அ
★ பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும்.
★ சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப்பேறு எனக் குறிப்பிடல் வேண்டும்.
★ விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே எழுத்துப்பேறு ஆகும்.
★ எழுத்துப்பேறு காலம் காட்டாது.
பாடுதி-பாடு + த் + இ மொழியாதான் - மொழி + ய் + ஆ + த் + ஆன்
இச்சொற்களில் 'இ' என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிக்கு முன்னும் 'ஆ' என்னும் எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும் த் என்பது எழுத்துப்பேறாகும்.
சாரியை:
* பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து
இயைய வரும் உறுப்பு, சாரியை ஆகும்.
* பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
பார்த்தனன் - பார் + த் + த் + அன் + அன்
இச்சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் 'அன்' என்பதே சாரியையாகும்.
* சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று
குறிப்பிடல் வேண்டும்.
தருகுவென் - தா(தரு) + கு+ வ் + என்
இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில்வரும்'கு என்பதே சாரியையாகும்.
* சாரியைக்குப் பொருள் இல்லை.
அன் என்பது விகுதியாக வரும்போது அன் என்பதே சாரியையாக வரும்.
ஆன், ஆள். ஆர் ஆகிய விகுதிகள் வரும்போது அன் சாரியையாக வராது.
விகாரம்:
* பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
* ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும்.
இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
நின்றான் - நில்(ன்) + ற் + ஆன்
'நில்' என்னும் பகுதியில், 'ல்' ' ன்' ஆகத் திரிந்தது.
வணங்கிய - வணங்கு + இ(ன்) * ய் * அ - இ(ன்) என்னும் இடைநிலையில் னகரம் கெட்டது.
கண்டான் - காண் (கண்) + ட் + ஆன்- காண் என்னும் பகுதி கண் எனக் குறுகியது.
எழுதினோர் - எழுது + இன் + ஓர்(ஆர்) - ஆர் என்னும் விகுதி ஒர் என நின்றது.
நினைவில் கொள்க.
இறந்தகால இடைநிலைகள் த், ட், ற், இன்
நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று
எதிர்கால இடைநிலைகள் ப், வ்
எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல்
தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன், அல், அன் கு, டூ, து,று
தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் எம், ஏம், அம், ஆம், ஓம், கும், ரம், தும், றும்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஐ, ஆய், இ
முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் இர், ஈர், மின்
படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் அன், ஆன்
படர்க்கைப் பண்பால் வினைமுற்று விகுதிகள் அள், ஆள்,
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள் அர், ஆர், ப, மார், கள்
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் து, று, ட
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் அ, ஆ
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர்
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் அ, உம்
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் உ,இ..
தமிழ் ஓர் ஒட்டுநிலை மொழி. ஒரெழுத்து ஒருமொழிச் சொற்கள் இருப்பினும் தமிழில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லாவதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்தே சொல்லாகின்றன. அவ்வாறு சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கு ஒரு மொழியியல் நுட்ப அடிப்படை உள்ளது.
பகுதி ஒருமொழியின் அடிப்படையான வேர்ச்சொல்லாகும். புதிய சொல்லாக்கத்திற்கு
வேர்ச்சொற்களின் வருகை அவற்றின் சேர்க்கை பற்றிய மொழியியல் நுட்ப அறிவு இன்றியமையாதது.
இதன்மூலம் துறைதோறும் புதிய கலைச்சொற்களை உருவாக்க முடியும்.
திணை, பால், எண், இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி தமிழ்மொழி. இச்சிறப்புக்குக்
காரணம் சொல்லின் விகுதி ஆகும். இவ்வாறு வேறு வேறு உறுப்புகளை இணைத்துச் சொற்களை
உருவாக்க முடியும். இச்சொற்களை வேண்டூம்போது பிரித்துக் கொள்ளலாம்; மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாம். பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாது.
பகுபதத் தன்மை உள்ள மொழியைக் கற்றுக் கொள்வது எளிது. பிற மொழியினர் தமிழை
எளிமையாகக் கற்றுக்கொள்ள இதுவுமொரு காரணம் ஆகும். மேலும், இப்பகுபதத் தன்மையால்
எண்ணிறந்த சொற்கள் உருவாகின்றன. இது மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும்
இன்றியமையாதது ஆகும்.