ஏன் புனித நாட்களில் கடலில் நீராடுகிறோம்?
ஏன் புனித நாட்களில் கடலில் நீராடுகிறோம்?
"'கடல்' - இது பூமித் தாயின் திரவச் சேலை."
நுரைச் சதங்கை கட்டி கடல் அலைகள் காலகாலமாக கரையை அடைய போட்டிப் போட்டுக் கொண்டு இருப்பதை நூற்றாண்டுகளாக பிரபஞ்சம் தோன்றிய காலம் தொட்டு காண்கிறோம் நாம்.
'கடலில் கால் நனைத்தது போக.. கடலில் இறங்கி குளித்தால் எப்படி இருக்கும்?!..' என்கிற எண்ணம் பலருக்கு வர, அதனை சிலர் மட்டுமே புனித நாட்களில் நிறைவேற்றி ஆன்மீக ஞான முத்துக்களை பெற்றுக் கொள்கின்றனர். எனினும், கடலில் நீராடுவதை கங்கையில் நீராடுவதற்கு சமம் என்று சொல்லுதல் இயலாது.
காரணம் கங்கையில் எப்போது நீராடினாலும் புண்ணியம் உண்டு. அதுவே, கடலில் ஆடி, தை அமாவாசை போன்ற நாட்களில் நீராடினால் மட்டுமே புண்ணியம் என்று சொல்வதை விட பீடை தொலையும் என்று சொல்லலாம். அதுவே, மற்ற நாட்களில் கடலில் நீராடுதல் கூடாது. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான திதியாகும். இந்நாட்களில் முப்பது முக்கோடி தேவர்கள் தாமாக முன் வந்து மனிதர்களுக்கு சக்தி அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை தினத்தன்று தேவர்கள் பூலோகத்தில் மானுட ரூபத்திலும் வேறு வடிவங்களிலும் வந்து பலவிதமான புண்ணிய நதிகளிலும் கடல் நீரிலும் நீராடி, தங்கள் தேவ சக்திகளை பூலோகத்துக்கு அர்ப்பணிக்கின்றனர் என்பதாக சாஸ்திரங்கள் ஆன்மீகத் தகவல் பகிர்கிறது.
பொதுவாகவே, தினமும் கடலில் நீராடுதல் கூடாது. ஆனால், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம் போன்ற புனித கடல் தீர்த்தங்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதாவது மேற்கண்ட கடல்களில் தினமும் நீராடலாம். ஆடி, தை அமாவாசை தினங்களில் எல்லா இடங்களிலும் கடல் நீராடலாம். மற்ற நாட்களில் இதர கடல்களில் நீராடுதல் ஆன்மீக பயன் அளிக்காது. எனினும், உங்கள் 'நீர் ஆசை', 'நிராசையாகாமல்' இருக்க விரும்பினால், நீங்கள் கடலில் குளிக்கலாம். குளித்து மகிழலாம்.
சில சமயங்களில் இறந்தவர்களின் அஸ்தியை கடலில் கலப்பது உண்டு. காரணம், கடலில் அனைத்து நதிகளும் சங்கமிப்பதால் மட்டும் அல்ல, கடல் புனிதமானது என்று சொல்லப்படக் காரணம்… இன்றைக்கு கடல் நீர் மட்டும் இவ்வளவு உப்புத் தன்மை கொள்ளாவிட்டால் உலகமே அசுத்தமாய், மாறி விடும். ஏனெனில், அனைத்து வித கழிவையும் தன்னுள் ஏற்று அவற்றை சுத்திகரிப்பதாய் அமைந்திருப்பதே கடல் நீராகும். கடலில் உப்புத் தன்மை இருப்பதே, அதனை ஆன்மீக காரியங்களுக்கு ஏற்றதாக செய்கிறது.
பொதுவாகவே, உப்பு சக்தி என்பது தீவினைகளைக் கழிக்கும் ஒரு தெய்வீக சக்தியாகும். இந்த சக்தியை லவண லோகத்திலிருந்து பெற்றுத் தருவதே சமுத்திரராஜனின் தேவாதி தேவ கணங்களாகும். இவர்கள் யாவரும் ஒவ்வொரு ஆடி மற்றும் தை அமாவாசை தினத்தன்றும் லவண லோகத்தில் இருந்து வந்து கடலில் பிரசன்னமாகி தம் லவண அமிர்த சக்தியை நீராடுபவர்களுக்கு அளித்துச் செல்கின்றனர்.
அப்படித் தான் 18 புராணங்களில் கடல் பற்றிய ஆன்மீகத் தகவல்கள் பகிரப்படுகிறது. எவ்வாறு கடல் நீரானது அனைத்துவித மாசுகளையும் நீக்கி, அதில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுகிறதோ, அதேபோல் தை, ஆடி அமாவாசை தினங்களில் கடல் நீராடுதலால் ஒருவரது மன அழுக்கு நீங்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. நாமும் கூட புனித நாட்களில் கடலில் நீராடி மகிழ்வோம். ஓம் நமச் சிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.