பகுபத உறுப்பிலக்கணம்: தமிழ் இலக்கணம்,Tamil Grammar
பகுபத உறுப்பிலக்கணம்:
* பதம்(சொல் ) இருவகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.
* பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.
* இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.
* பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
பகுதி (முதனிலை):
சொல்லின் முதலில் நிற்கும்; பகாப்பதமாக அமையும்; வினைச்சொல்லில்
ஏவலாகவும்,
பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.
விகுதி (இறுதிநிலை):
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும்
அமையும்.
இடைநிலை:
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.
சந்தி:
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும்
இடைநிலைக்கும் இடையில் வரும்.
சாரியை:
பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும்
விகுதிக்கும் இடையில் வரும்.
விகாரம்:
தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.
பகுதி:
ஊரன் - ஊர்,
வரைந்தான் - வரை
நடிகன் - நடி,
மடித்தார் - மடி
பார்த்தான் - பார்,
மகிழ்ந்தாள் - மகிழ்
விகுதி:
படித்தான்
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி அன், ஆன்
பாடுகிறாள்
ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி அள், ஆள்
பெற்றார்
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி அர், ஆர்
நீந்தியது
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி து, று
ஓடின
அ – பலவின்பால் வினைமுற்று விகுதி அ, ஆ
சிரிக்கிறேன்
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி என், ஏன்
உண்டோம்
ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி அம், ஆம், எம், ஏம், ஓம்
செய்தாய்
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ஐ, ஆய், இ
பாரீர்
ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி இர், ஈர்
அழகிய, பேசும்
அ, உம் – பெயரெச்ச விகுதிகள் அ, உம்
வந்து, தேடி
உ, இ - வினையெச்ச விகுதிகள் உ, இ
வளர்க
க – வியங்கோள் வினைமுற்று விகுதி க, இய, இயர்
முளைத்தல்
தல் – தொழிற்பெயர் விகுதி தல், அல், ஐ, கை, சி, பு...
இடைநிலைகள்:
வென்றார்
ற்-இறந்தகால இடைநிலை த், ட், ற், இன்
உயர்கிறான்
கிறு – நிகழ்கா ல இடைநிலை கிறு, கின்று, ஆநின்று
புகுவான், செய்கேன்
வ், க் – எதிர்கால இடைநிலைகள் ப், வ், க்
பறிக்காதீர்
ஆ – எதிர்மறை இடைநிலை இல், அல், ஆ
மகிழ்ச்சி, அறிஞன்
ச், ஞ் – பெயர் இடைநிலைகள் ஞ், ந், வ், ச், த்
சந்தி:
உறுத்தும்
த் - சந்தி த், ப், க்
பொருந்திய
ய் – உடம்படுமெய் சந் தி ய், வ்
சாரியை:
நடந்தனன்
அன் – சாரியை
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து,
அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்
எழுத்துப்பேறு:
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி,
விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல்
வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும். சாரியை இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு.
எடுத்துக்காட்டுகள்:
வந்தனன்: வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
வா – பகுதி (’வ’ ஆனது விகாரம்)
த்(ந்) – சந்தி (’ந்’ ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று
விகுதி
செய்யாதே: செய் + ய் + ஆ + த் + ஏ
செய் – பகுதி
ய் – சந்தி
ஆ – எதிர்மறை இடைநிலை
த் – எழுத்துப்பேறு
ஏ – முன்னிலை ஒருமை ஏவல்
வினைமுற்று விகுதி