Why do birds fly in a V pattern ? பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்?
பறவைகள் ஏன் V வடிவத்தில் பறக்கின்றன?
நாம் பறவைகள் கூட்டமாக பறந்து செல்வதை பார்த்திருப்போம். கூட்டமாக பறக்கும் பறவைகள் V வடிவில் பறந்து செல்வதை கவனித்திருக்கிறீர்களா? பறவைகள் ஏன் அவ்வாறு பறந்து செல்கிறது? என்பதை இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு, நாரை போன்ற வெளி நாட்டுப் பறவைகள் இந்த வடிவத்தில் பறப்பதை நம்மால் காண முடிகிறது.
ஒரு பறவை முன்னால் பறந்தும், பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்த்திருப்போம். பொதுவாக இதன் வடிவம் V ஆக இருக்கும்.
பறவைகள் V வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலை விட, V வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன.
பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கையில் காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை மிக அதிகமாக இருக்கும். பறவைகள் இது போல V வடிவில் பறப்பதால், அதன் பின்னுழுக்கும் விசை வலுவிழந்து சமநிலைபடுத்தப்பட்ட மிதக்கும் விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகு தூரம் எளிதாக பறக்கின்றன.
காற்றிற்கு எதிராக பறவைகள் பறக்கும் போது அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கின்றன. எனவே, மிக விரைவில் சோர்வடைகின்றன. அப்படி சோர்வடையும் போது பின்னால் வருகிற பறவைகள், முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன. சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். இப்படியே நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொடர்ந்து பறக்கின்றன. மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன.
இது போல பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் மிக நீண்ட தூரம் பறக்கும் போது, அனைத்துப் பறவையும் சக பறவைகளின் பார்வையில் இருக்கும். தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவை கூட்டத்தை பின் தொடர்ந்து பறந்து செல்கின்றன.