பால் பொங்கியாச்சா! இந்தக் கேள்வியைக் கேட்டாலே போதும். உடனே சொல்லிவிடுவீர்கள்,.
பால் பொங்கியாச்சா!
இந்தக் கேள்வியைக் கேட்டாலே போதும். உடனே சொல்லிவிடுவீர்கள்,.
அன்று பொங்கல் திருநாள் என்று!
அன்றைய தினம் அந்தக் கேள்வி கேட்கப்படுவது, ஆயிரமாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.
சூரியனின் உதவியால் பயிர்கள் செழித்து நாடும் வீடும் வாழ, வழி பிறக்கிறது என்பதால், ஆதித்தனுக்கு அன்போடு நன்றி சொல்லும் நாளாகவே ஆரம்பமாகி இருக்க வேண்டும் பொங்கல் திருநாள்.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் உயர்வான கோட்பாடு உடையவர்கள் தமிழர்கள்.
அந்த வகையில், தங்கள் செயல்களுக்கு உதவிடும்,
உறுதுணையாக இருந்திடும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண்டுக்கு ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டாடியதே மாட்டுப் பொங்கல்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தென் திசையில் பயணிக்கும் சூரியன், வடதிசையில் தன் தேரின் திசையை
மாற்றும் நாள் ஆரம்பமாவது தை மாதத்தில்தான்.
ஆறுமாத காலம் ஒரு பகுதிக்கு மட்டுமே கிடைத்த சூரியனின் முழு கிரணப் பலன்கள் தைமாதம் முதல் அடுத்த பகுதிக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதால் தைபிறந்தால் வழிபிறக்கும் என்றார்கள்.
அதுமட்டுமல்ல, சுபகாரியங்களைத் தொடங்கிட உகந்த மாதமாக தைமாதம் கருதப்படுவதால்,
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்,
புதிய பணிகள் தொடங்கப்பட்டு வாழ்வில் உயர நல் வழிபிறக்கும்
என்றும் சொன்னார்கள்.
சரி… இதிலே எங்கே வருகிறது பால் பொங்கல்?
பயிர்கள் முளைத்தாலும் கதிர்களில் பால்பிடித்தல் நடந்தால்தான்
அறுவடையில் பலன் அதிகம் கிட்டும். அதனால், செழிப்பான அறுவடை கிடைத்ததா என்று கேட்க, பால் பெருகிற்றா? என்று கேட்டார்கள்.
அடுத்து, சுப நிகழ்ச்சி எதுவானாலும் முதல் செயலாக, பாலைக் காய்ச்சுவதில்தான் ஆரம்பிப்பார்கள். (கிரகப்பிரவேசம் ஞாபகம் வருகிறதா?).
அதனால், உங்கள் வீட்டில் இனி சுப நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிக்கட்டும் என்பதற்காக பால்பொங்கிற்றா? என்று கேட்டு நல்ஆசி சொன்னார்கள்.
உடல் ஆரோக்யமாக உள்ளவர்க்கு முழுமையான உணவு, பால்.
அதனால் உங்கள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கட்டும் என்பதாகவும் அப்படிக் கேட்டார்கள்.
சிறப்பான அறுவடைக்கு அடையாளமாக, அரிசி, பருப்பு;
மகிழ்ச்சிக்கு அடையாளமான வெல்லம், ஆரோக்யமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும்விதமாக கரும்பு, மங்களங்கள் நிறைந்திருக்கின்றன எனச் சொல்லும்விதமாக மஞ்சள் என்று எல்லாம் இடம்பிடித்து பொங்கலோ பொங்கல் எனக் குரல் எழும்பும் இடத்தில், மகிழ்ச்சியும் மங்களமும் பொங்குவதாகத்தானே அர்த்தம்? அந்த வகையில் உங்கள் வீட்டிலும் தைத் திருநாளில் பால் பொங்கட்டும்!
என்ன உங்க வீட்டுலையும் பால் பொங்கிச்சா ???