Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 12, 2022

ராபர்ட் கால்டு வெல்



ராபர்ட் கால்டு வெல்



"யார் இந்த ராபர்ட் கால்டு வெல்?:

இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார்."

இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார். அந்த வகையில், திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.


இவரது இளமைக் காலம்: 

இவர் 1814-ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838, சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் இராபர்ட்டு கால்டுவெல்லும் ஒருவராவார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார்.

பின்னர் திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில், திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். தமிழில் உள்ள கிறிஸ்தவ மதப் பிரார்த்தனை நூலையும், புதிய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார்.

 தமிழ்ப் பணியோடு வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்ட கால்டுவெல், ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of Tinnevely) என்னும் நூலைப் படைத்தார்.

கால்டுவெல்லின் ஒப்பியல் ஆய்வு:

கால்டுவெல்லின் பணிகளுள் தலையாயதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த அவரது ஆய்வுகளே. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்னும் கருத்து வலுப்பெற்றிருந்த காலம் அது. 1838-ல், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பேராசிரியர் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு இடையேயுள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, இவை நான்கும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறினார். 

சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை இவரது பெயராலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பண்டைய தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும், பண்டைய தெலுங்குச் சொற்களோடும் ஒப்பிட்ட கால்டுவெல், நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் வேர்கள் இம்மூன்று மொழிகளிலும் ஒன்றுபட்டு இருப்பதைக் கண்டார்.

ஐரோப்பிய மொழி நூல்களில் உள்ள ஆராய்ச்சி முறைகளின் துணையோடு, தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்தார் கால்டுவெல். 15 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில், தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமை உடையதாக விளங்குவதைக் கண்டார்.

 தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், துதம், கோதம், கூ, கோண்ட், பிராகுய் உள்ளிட்ட மொழிகளைத் திருத்தமடையாத மொழிகள் என்றும் வகைப்படுத்தினார். இம்மொழிகளைத் திராவிடம் என்னும் பெயரால் அழைத்தார்.

 இந்திய மொழிகளில் திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும், அவை இந்தோ – ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையவை அல்ல என்றும் பல்வேறு சான்றுகளோடு நிறுவினார். தனது ஆய்வை 1856–ல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இதுவே இவரது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

திராவிட மொழிகளுக்கே உரித்தான கூறுகளைத் தமது நூலில் விளக்கியுள்ள கால்டுவெல், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் திராவிட இலக்கண ஆசிரியர்கள் வகுத்த முறை உலகத்தில் வேறெந்த மொழி நூலிலும் காணப்படாத சிறந்த முறை என்று போற்றியுள்ளார். தென்னிந்திய மொழிகளுள் மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக வழங்கி வந்ததாகவும், பின்னாளில் வடமொழிச் சொற்களைத் தழுவிய காரணத்தால், முற்கால மலையாளத்திலிருந்து வேறுபட்டு வழங்கலாயிற்று எனவும் குறிப்பிடும் கால்டுவெல், அவ்வாறே தெலுங்கும் கன்னடமும் வடமொழிச் சொற்களை அளவின்றி ஏற்று வழங்கத் தொடங்கியதால், இருமொழிகளும் வடமொழி உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலை இழந்துவிட்டதாகவும் கூறுகிறார். 

தமிழ் நூல்களை இயற்றிய புலவர்கள் இயன்றவரை தமிழ்ச் சொற்களையே நூல்களில் கையாண்டதாலும், இன்றியமையாத வடமொழிச் சொற்களை ஏற்கும்போதும் அவற்றைத் தமிழுக்கேற்ற வகையில் மாற்றியமைத்து வழங்கிவந்ததாலும் இன்றளவும் தமிழ்மொழி அதன் திறம் குன்றாது வழங்கிவருகிறதெனவும், தமிழில் இன்று வழங்கும் வடமொழிச் சொற்களை அகற்றினாலும் தமிழ் தனித்து இயங்கவல்லதென்றும் தனது ஆராய்ச்சியில் நிறுவியுள்ளார்.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்