"'சாக்கரடீஸ்' - இதனால் தான் தத்துவ ஞானி ஆகிறார்."
சாக்கரடீஸ்
"'சாக்கரடீஸ்' - இதனால் தான் தத்துவ ஞானி ஆகிறார்."
'சாக்கிரட்டீசு', ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் 'சாக்ரடீசு' என்பது இவருடைய சிறப்பாகும். வாங்க, இன்று இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை குறித்துப் பார்ப்போம்.
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஜோதிடர் ஒருவர், ‘‘உங்கள் முகத்தைப் பார்த்து என்னால் உங்கள் குணத்தைச் சொல்ல முடியும்’’ என்று சொல்லவும் ஆரம்பித்தார். ‘நீங்கள் முன் கோபி, பேராசைக்காரன், பிடிவாதக்காரன்’’ என்று கூறிக்கொண்டே போன ஜோதிடரை அடிக்கப் பாய்ந்தனர் சாக்ரடீஸின் சீடர்கள். அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ‘‘அவர் சொன்ன அத்தனை குணங்களும் முன்பு என்னிடம் இருந்தன. இப்போதுதான் அவற்றை வென்று, நல்ல குணங்களைப் பின்பற்றி வருகிறேன். கெட்ட குணங்கள் என் உள்ளத்தை விட்டு மறைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவை இன்னும் என் முகத்தை விட்டு அகலவில்லை என்பதை இப்போது இவர் மூலமாகத் தெரிந்து கொண்டேன். தீய குணங்கள் முகத்திலோ, உள்ளத்தின் ஒரு மூலையிலோ இருந்து கொண்டுதான் இருக்கும் போலும், பிடிவாதமாக நற் பழக்கங்களைக் கடைப்பிடித்தால் தீய குணங்களின் அடையாளம் கூடத் தெரியாமல் விளங்கலாம்!’’ என்றார். அத்துடன் சாக்கரடீஸ் அந்த ஜோதிடருக்கு வெகுமதிகள் கொடுத்து அனுப்பினார்.
இதனால் தான் 'சாக்ரடீஸ்' உலகின் உண்மையான, உன்னதமான தத்துவ ஞானிகளுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.