நோபல் பரிசு உருவான கதை பற்றித் தெரியுமா?!
"உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்று நோபல் பரிசு. டைனமைட் உள்ளிட்ட பல வெடி பொருட்களை உருவாக்கிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'ஆல்பிரட் நோபல்' என்பவரே இந்தப் பரிசு உருவாகக் காரணமாக இருந்தவர். "
யார் இந்த 'ஆல்பிரட் நோபல்'?:
உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவராக தற்காலத்தில் அறியப்படும் ஆல்பிரட் நோபல், ராணுவத்திலும், சுரங்கம் உள்ளிட்ட கட்டுமானத் துறையிலும் பயன்படுத்தப்படும் 150-க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த வெடிப் பொருட்களை கண்டு பிடித்தவர்.
இவற்றில் அதிகமாக அறியப்படுவது டைனமைட். உண்மையில் டைனமைட்டை விடவும் சக்திவாய்ந்த பல வெடிப் பொருட்களை ஆல்பர்ட் நோபல் கண்டுபிடித்திருக்கிறார்.
விபரீதமாக முடிந்த ஆய்வு!:
இப்படியாக, 'ஆல்பிரட் நோபல்' வெடி பொருட்கள் சம்மந்தமாக ஒரு ஆய்வை நடத்திய சமயம். அது விபரீதத்தில் முடிந்தது. ஆம்! அந்த ஆய்வில், பெரும் விபத்து ஒன்று நடந்தது. அதில் தனது சகோதரர் எமிலையும், பல தொழிலாளர்களையும் பறிகொடுத்தார். பல நாட்டு அரசுகள் இவரது வெடிப் பொருட்களைத் தடை செய்தன.
இருப்பினும் தலைமறைவாக இருந்தபடியே பல வெடிபொருட்களை உருவாக்கினார் ஆல்பிரட் நோபல். இவற்றுக்குக் காப்புரிமை பெற்றதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பெரும் பணம் இவருக்குக் கிடைத்தது.
ஆல்பிரட் நோபலும் 'நோபல் பரிசும்'! :
ஸ்வீடனின் மிகப்பெரிய பொறியியல் குடும்பத்தில் 1833 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பிரட் நோபலுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர்களில் எமில் தவிர, லுட்விக் நோபல் மற்றும் ராபர்ட் நோபல் போன்றோர் காஸ்பியன் கடலோரம் அஜர்பைஜான் நாட்டில் எண்ணெய்க் கிணறுகளில் முதலீடு செய்திருந்தனர். ஆல்பிரட் நோபலுக்கும் இதில் கணிசமான பங்கு இருந்தது.
அந்த வருடம் அது 1888, லுட்விக் நோபலின் மரணத்தின்போது பல செய்தித்தாள்கள் ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாகத் தவறான செய்தியை வெளியிட்டது. அதில் ஒரு பிரெஞ்சு இதழ், மரணத்தின் தூதர் இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தது. இது கண்டு 'ஆல்பிரட் நோபல்' மனம் நொந்தார். வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக தாம் பதிவு செய்யப்படக்கூடாது என்று விரும்பினார்.
தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவு செய்வது என முடிவெடுத்த நோபல், பல உயில்களை எழுதினார். அதில் கடைசி உயில்தான் நோபல் பரிசு பற்றியது. தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியில், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். நோபல் பரிசுக்காக ஒதுக்கப்பட்ட தொகையின் தற்போதைய மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய்.
1896-ல் பெருமூளை இரத்தக் கசிவின் காரணமாக நோபல் இறந்தார். அவரது விருப்பப்படி, 1901-ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969-ம் ஆண்டு முதல் ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபலின் பெயரிலேயே பொருளாதாரத்துக்கான பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மனித உயிர்களைக் கொல்வதற்காகப் பயன்படும் வெடிப் பொருட்களைக் கண்டுபிடித்த நோபல், இறப்புக்குப் பிறகு தாம் நினைத்தபடியே சமாதானத் தூதராகவே அறியப்படுகிறார். இவரது பெயர் நோபல் பரிசுக்கு மட்டுமல்லாமல், நோபலியம் என்ற தனிமத்துக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், 'ஆல்பிரட் நோபல்' மனிதருள் இன்னொரு மாணிக்கம் தான். இதனை மறுப்பதற்கு இல்லை.