Search This Blog

நவம்பர் 14 - குழந்தைகள் தினம் children's day - பண்டித நேருஜி பிறந்த நாள்

பண்டித நேருஜி பிறந்த நாள்!



"பண்டித நேருஜி பிறந்த நாள். இதனைக் 'குழந்தைகள் தினம்' என்றும் கொண்டாடுவர்."

இந்த உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். பொதுவாகவே, வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் 'ஜவகர்லால் நேரு'.

 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். சுதந்திர இந்தியாவில் குழந்தைகளுக்கு, சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும், குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் இன்றைய தினத்தில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தியாவில் தற்போதும் கூட பல குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இன்றும் கூட இந்தியாவில் பிச்சை கேட்கும் பலர் குழந்தையை வைத்துக் கொண்டும், குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவதும் கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க இந்தியாவில் அதற்கென 'Child help line toll free number (1098)' இருப்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டில், குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

அதிலும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!. மொத்தத்தில், குழந்தைகளே இந்த தினத்தை கொண்டாடி மகிழுங்கள். அனைத்துக் குழந்தைகளுக்கும் நிலா நாட்காட்டியின் சார்பாக நாங்கள் 'குழந்தைகள் தின வாழ்த்துக்களை' தெரிவித்துக் கொள்கிறோம். 

Wishing you all a happy children's day.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url