செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் world firstaid day
ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை செஞ்சிலுவைச் சங்கம் 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. உரிய நேரத்தில் முதலுதவி செய்யப்பட்டால் பல மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நோக்கத்தோடு இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் மனித உயிர்களை அதிகம் பலி வாங்குவது சாலை விபத்து. உலக அளவில் 30 வினாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கிறார். விபத்து நிகழ்வுகளில், அது நிகழ்ந்த சில நிமிடங்களுக்குள் 50 சதவிகிதத்துக்கும் மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அடிபட்டவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தால் குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்பைத் தடுக்க முடியும். உரிய நேரத்தில் அவசியமான முதலுதவி செய்ய நமக்கு பயிற்சி முக்கியம். முதலுதவிப் பயிற்சி, விபத்தின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. மிகப் பெரிய மற்றும் சிறிய அவசரகாலங்களில் உதவுவதற்கும் சிறப்பாக செயல்படுவதற்கும் தேவையான திறமையைக் கொடுக்கிறது.
பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் முதலுதவி போன்ற அடிப்படை பயிற்சிகள் பொதுவாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. உதாரணத்திற்கு இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு பயிற்சி முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது,நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பல நாடுகளில், அவசர ஊர்தி வந்துகொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்யவேண்டுமென்று அடிபட்டவரை பார்த்துகொண்டிருப்பவரிடம் சொல்வார்கள். முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் இவ்வகுப்புகளுக்கு போவதும் சான்றிதழை புதுப்பித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று.