கொசுக்கள் மனிதர்களை கண்டு அறிவது எப்படி?
கொசுக்கள் மனிதர்களை கண்டு அறிவது எப்படி??
🍂 மனித வாடையை முகர்ந்துவிட்டால், கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.
🌿 மனித மூச்சில் உள்ள கார்பன் - டை - ஆக்சைட் வாடை தான் கொசுக்களுக்கு அழைப்பிதழ். ஆனால், தற்போது வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.
🍂 அதாவது, மனித மூச்சிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகு, அவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றன.
🌿 அப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றன. அப்படி தட்டுப்பட்டதும், அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.
🍂 ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும், கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.
🌿 இது ஏன் என்று ஆராய்ந்தபோது, மனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும், அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றன. முதலில் கார்பன் - டை - ஆக்சைட் வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும்.
🍂 அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.
🌿 மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.