காமட்டா திருவிழா முழு விளக்கம்:
காமட்டா திருவிழா:
ஒரு சில கிராமங்களில், பல ஆண்டுகளாக, "காமட்டா' எனும், "காமன் திருவிழா' நடந்து வருகிறது.
சில கிராமங்களில், மழை வேண்டியும், திருமண தோஷம் நீங்கவும், "காமன் திருவிழா' (காமட்டா) வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கிராம பெண்கள், கும்மி பாடல்கள் பாடியபடி, களி மண்ணால் செய்த சிலைகளை, நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி அனைவரையும் கவர்கிறது.
இவ்விழாவையொட்டி, கிராமத்தில் உள்ள கோவிலின் அருகில் பச்சை பந்தல் அமைத்து, மேடை பகுதியில் களி மண்ணால் ஆண், பெண்கள், மூதாட்டி உருவத்தில் வடிவமைத்த சிலைகளை வைக்கின்றனர்.
முதல் நாள், கிராம மக்கள் வீடுகளில் மாவிளக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்வர். அப்போது, 12 முதல், 15 வயதுக்குட்பட்ட வயதுக்கு வராத இளம் சிறுமிகள், களி மண்ணால் செய்துள்ள காமட்டாப்பன் சிலைகளுக்கு பூஜை செய்வர். அப்போது, இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் ஒன்று சேர்ந்து குடில் அமைத்த இடத்தில், கும்மி பாடல்களை பாடியபடி நடனமாடுவார்கள்.
இரண்டாம் நாளில், அச்சிலைகளை சிறுமிகள் தலையில் சுமந்து கொண்டு ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைத்துவிடுவர். இவ்வாறு காமட்டா ஸ்வாமிக்கு பூஜை செய்வதால் மழை பொழிவும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
காமட்டா ஸ்வாமி வழிபாடு செய்து அச்சிலைகளை ஆறுகளில் கரைத்துவிட்டால், மழை பொழிவு ஏற்படும். தவிர, பருவ காலத்தில் வயதுக்கு வராத சிறுமிகள் பூப்பெய்வதும், திருமண தடையும் நீங்கும் என்பது காலம் காலமாக கிராமத்தில் உள்ள நம்பிக்கை.