சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC
சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.
இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன.
இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
பின்னர் ஏற்பட்ட கடல்கோளினால் பூம்புகார் நகரம் அழிந்துவிட்டது.
இந்நகரத்தின் பெருமையை உலகறியச் செய்ய கி.பி.(பொ.ஆ.) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம் ஆகியன அமைந்துள்ளன.
இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.