Search This Blog

இரவில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! Foods to eat and avoid at night!


இரவில் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!


"உலகில் மனிதன் "போதும்" என்று சொல்லக் கூடிய ஒரே விஷயம் உணவு தான். "

காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. 


ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம்.


 ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்! 


அதிலும், இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது.

 சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம்.


இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும்.


 நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம்.

 நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், தகாத உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது.

 இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி.


 சரி, அடுத்ததாக இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்துப் பார்ப்போம்.


ஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்சனை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது.


 உதாரணமாக, இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்கள், காரமான உணவு வகைகள் மற்றும் துரித உணவுகளை இரவில் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. 


அதிலும், இந்தத் துரித உணவுகள் செரிமானத்துக்குப் பிரச்சனையை உண்டாக்குவதுடன் ஆழ்ந்த உறக்கத்தையும் கெடுத்துவிடும்.

 ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான இரவுநேரப் பார்ட்டிகளில், செரிமானக் கடினமான உணவு ரகங்கள்தாம் பரிமாறப்படுகின்றன. அதனால், இரவுநேர பார்ட்டி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை இரவில் சாப்பிட்டால் விஷ உணவுக் குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.


 சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவில் ஒதுக்குவது என்பது நல்லது.

 இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, செரிமானமாகாத உணவுகள் வயிற்றுக்குள் எழுப்பும் `கடமுடா' ஓசைகளும், `தடதட' அசைவுகளும் நம்மை தட்டி எழுப்பிவிடக் கூடாது.

 எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

 காரணம், அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மறுநாள் மலக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட இடம் உண்டு.

அதுபோல, கீரை வகைகள், தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம். கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இரவு நேரத்தில் காய்கள் அடங்கிய சூப் வகைகள், மிளகு மஞ்சள் சேர்த்த பால் போன்றவை உகந்ததாக இருக்கும். பன்னாட்டுக் குளிர்பானங்கள்… இரவில் மட்டுமல்ல எப்போதுமே வேண்டாம்.


 இரவில் உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும். மொத்தத்தில் ஆரோக்கியமாகச் சாப்பிடுங்கள் நலம் பெறுங்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url