Search This Blog

ஹோலியின் வரலாறு History of Holi:

கலர்புல் ஹோலி, இன்னைக்கு ஜாலி!

"வசந்த காலத்தை வண்ணப் பொடிகள் தூவி வரவேற்கும் நிகழ்வே ஹோலிப் பண்டிகை எனப்படுகிறது. இது ரங்குபஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. 'ரங்கு' என்றால் 'வண்ணம்'. 'பஞ்சமி' என்றால் 'ஐந்து'."

இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். இந்நாளில், நம் வாழ்வில் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கிட வண்ண மயமான வாழ்வு மலர்ந்திடும் நோக்கோடு வண்ணப் பூச்சுகளால் உடல் நனைக்கிறார்கள் மக்கள்.

ஹோலியின் வரலாறு:

ஹோலிக்கு இரண்டு காரணக் கதைகள் சொல்லப்படுகிறது.

முதலாவது, இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.

ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள்.

இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

நாமும் கூட இந்த நாளில் நன்மைகள் பெருகி, தீமைகள் அகல இறைவனை வேண்டுவோம்.


இரண்டாம் கதை:

சிவபெருமான் தவத்தில் இருந்தபோது பார்வதி தேவி அவரை மணப்பதற்கு விரும்பினார். சிவனின் தவத்தைக் கலைத்தால் தானே மணம் செய்ய முடியும். அதற்கு உதவும் பொருட்டு மன்மதனைப் பார்வதி தேவி நாட, அவன் சிவபெருமானின் மீது தன் ஆயுதத்தைச் செலுத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

தவம் கலைந்து எழுந்த சிவன் சினத்துடன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமதேவனைப் பார்க்க, அவன் உடல் எரிந்தது. மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுதலுக்கு இரங்கிச் சிவபெருமான் காமனை உயிர்ப்பித்தார். காம தேவன் உயிர் பிழைத்த நாளையே ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடுவதாகச் சொல்லப்படுகிறது.

சமத்துவம்:

தீயவர்களுக்கு எதிராக நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டை மறந்து ஒரு சேரவேண்டும் என்பதை இவ்விழா உணர்த்துகிறது. இந்த இளவேனிற்காலம் அனைவரின் வாழ்க்கையிலும் வளத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url