அங்கோர்வாட் கோயில் பற்றித் தெரியுமா? - Angkor Wat Temple - இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்
அங்கோர்வாட் கோயில் பற்றித் தெரியுமா?
"நம் இந்திய நாகரீகத்தின் தடயங்கள் என்பது இந்தியத் துணைக் கண்டத்தையும் தாண்டி சில இடங்களில் தென்படவே செய்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் உலகின் மிகப் பெரிய கோயிலான அங்கோர்வாட். "
கம்போடியாவில் தான் இந்த கோயில் உள்ளது. அங்கோர்வாட் என்றாலே 'கோவில்களின் நகரம்' என்று தான் அர்த்தம் அந்தளவுக்குப் பெரிய கோயில்களைக் கொண்ட ஊர் தான் இது. இந்த அங்கோர்வாட் பல நூற்றாண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் புதைந்தே இருந்தது. இதை 1860ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் கண்டுபிடித்தார். அப்போது இந்தக் கோயில் மோசமான நிலையில், இடிபாடுகள் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்த அங்கோர்வாட் புகழ் உலகெங்கும் பரவியது. அதைத் தொடர்ந்து கோயில்களில் ஓரளவுக்கு மறுசீரமைப்பு பணிகளும் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் இந்த கோயில்களின் நகரத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள்.
மத ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கட்டுமானங்களில் ஒன்றாக இந்த அங்கோர்வாட் கருதப்படுகிறது. இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல்லவ வம்ச மன்னர்களில் ஒருவரான இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்னர் தான் இந்த அக்கோர்வாட்டை கட்டியுள்ளார். அப்பகுதியை ஆண்ட மிக முக்கிய மன்னர்களில் ஒருவராக இரண்டாம் சூரிய வர்மன் கருதப்படுகிறார். இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமீர் மொழிச் சொல்லாகும். இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோயில் புத்த மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் கூட ஒரு முறை சென்று இந்தக் கோயிலை கண்டு வாருங்கள். நிச்சயம் இதன் பிரம்மாண்டம் அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.