சிவப்பாக போகிறது நிலவு.. ஏன், எப்படி.. சந்திர கிரகணத்தில் நடக்கப்போவது என்ன? நாசா விளக்கம்
இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இந்த சமயத்தில் நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கப்போகிறது. இதற்கான காரணத்தை நாசா விளக்கியுள்ளது.
தற்போது நடைபெற உள்ள சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் நம்மால் பார்க்க முடியும். இதை தவறவிட்டால் மீண்டும் முழு சந்திர கிரகணத்தை காண நாம் 2025 வரை காத்திருக்க வேண்டும்.
இவ்வளவு சிறப்பான சந்திர கிரகணம் குறித்து எதிர்மறையாக சொல்லப்படுவது ஏன்? நிலா ஏன் ரத்த நிறத்தில் காட்சியளிக்கிறது? உள்ளிட்டவற்றிக்கு விடையாக அமைந்திருக்கிறது சந்திர கிரகணம் குறித்த நாசாவின் விளக்கம்.
இந்தியாவில் கிரகணம் குறித்து தவறான எண்ணங்களே இருந்து வருகிறது. கிரகணம் பிடிக்கும் அன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது எனவும், அன்று நாள் முழுவதும் கடவுளை வழிப்பட வேண்டும் எனவும் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதேபோல கோயில் நடைகளும் கிரகணம் அன்று குறிப்பிட்ட நேரத்தில் அடைக்கப்படும். வரும் 8ம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தன்று காலை 9 மணிக்குள் உணவு முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன் பின்னர் கிரகணம் முடிந்த பின்னர் குளித்துவிட்டு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜோசியர்கள் கூறி வருகின்றனர்.
சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்றதால் ராகு மற்றும் கேது கிரகணங்களை ஏற்படுத்துவதாக புராணங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் வானியலில் கிரகணம் என்பது ஒரு அற்புத நிகழ்வாகும். சூரியன் சந்திரனை விட 15 மடங்கு பெரியது ஆனால் சந்திரனிலிருந்து 15 மடங்கு தொலைவில் தள்ளி இருக்கிறது. எனவேதான் சூரியன்-நிலவு-பூமி நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஏனெனில் சூரியனை நிலவு மறைத்து விடுகிறது. அதேபோல சூரியன்-பூமி-நிலவு நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
பூமிக்கு பின்னாள் நிலவு இருப்பதால் சூரியனின் வெளிச்சம் நிலவின் மீது படாது. நிலவுக்கு இயற்கையில் ஒளிரும் தன்மை இல்லாத காரணத்தினால் நிலவு அமாவாசை போல இருட்டாக தானே இருக்க வேண்டும்? ஏன் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது? என்று தோன்றலாம். இதற்கான காரணத்தைதான் நாசா விளக்கியுள்ளது. அதாவது 'வெள்ளை நிறம் என ஒன்று தனியே கிடையாது. நிறங்களில் மூன்று மட்டும்தான் உண்டு. சிவப்பு, நீலம் மற்றும் பச்சை இந்த மூன்று நிறங்கள்தான் பிரதானமானவை. இவை ஒன்றோடு ஒன்று கலப்பதால்தான் மற்ற நிறங்கள் உருவாகின்றன. அந்த வகையில் ஏழு நிறங்களும் கலந்த கலவைதான் வெள்ளை.
இந்த வெள்ளையை நிறமானி கொண்டு பிரித்தால் ஏழு நிறங்களையும் நம்மால் காண முடியும். அப்படி இருக்கையில், பூமியின் நிழலில் நிலவு வரும்போது, சூரிய வெளிச்சம் முழுவதையும் பூமி மீது விழுந்திருக்கும். பூமி இயற்கையிலேயே வளி மண்டலத்தை கொண்டிருக்கிறது. இந்த வளிமண்டலம் நிறங்களை சிதறடிக்கும். அதானால்தான் சூரிய உதயத்தின்போதும், மறைவின்போதும் அந்த பகுதியில் வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சரி எல்லா நிறங்களையும்தானே வளி மண்டலம் சிதறடிக்க வேண்டும். ஏன் சிவப்பை மட்டும் விட்டு வைத்திருக்கிறது என்கிற கேள்வி எழலாம்.
சூரிய ஒளியல் உள்ள ஏழு நிறங்கள் vibgyor என அழைக்கப்படுகிறது. இந்த நிறங்களில் முதலில் உள்ள வைலட், இன்டிகோ, புளூ உள்ளிட்ட நிறங்கள் குறைந்த அலை நீளம் கொண்டவை. எனவே இது சிதறடிக்கப்பட்டுவிடும். ஆனால் அடுத்து உள்ள நிறங்களில் சிவப்பு மட்டும் அதிக அலை நீளம் கொண்டவை எனவே இது சிதறடிக்கப்படாமல் அப்படியே இருக்கும். இதனால் அந்தி வானமும், பொழுது புலரும் வானமும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதே டெக்னிக்தான் இந்த சந்திர கிரகணத்திலும் செயல்படுகிறது. சந்திரனை மறைத்திருக்கும் பூமி, தன் மீது விழும் ஒளியை வளிமண்டலம் மூலமாக சிதறடிக்கிறது. அவ்வாறு சிதறடிக்கப்படும் நிறங்களில் சிவப்பு மட்டும் அப்படியே தங்கி இருக்கும். இந்த சிவப்பு நிறம்தான் நிலவின் மீது விழுகிறது. இதனால் நிலவு ரத்த நிலவாக தெரிகிறது' என நாசா கூறியுள்ளது.