Search This Blog

தசரா பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா!



தசரா பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா!

"இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழாதான் தசரா. அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும்."

பெயர்கள் வெவ்வேறு இருந்தாலும் அதன் அர்த்தம் ஒன்றுதான் அது அம்மன் வழிபாடு. ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பிய வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜயதசமி நாளில் மைசூருவின் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது, கோவில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும் பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள்.

துர்க்கை மகிசாசூரனை அழித்தொழித்த நாளே விஜயதசமி என்பது, வடக்கே உள்ள ஐதிகம். பராசக்தியே துர்க்கை வடிவமாகும். தசராவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கமாகும். புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ‘ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி.

நடனக் குழுக்கள், இசைக்குழுக்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டங்கங்கள் எல்லாம் இந்த ஊர்வலத்தின் அழகைக் கூட்டும். இந்த ஊர்வலம் மைசூரு அரண்மனையிலிருந்து துவங்கி பன்னிமண்டபம் (Banni Mantapam) என்று சொல்லப்படும் இடத்தில் முடிவடையும். இந்த இடத்தில் இருக்கும் பன்னி (வன்னி மரங்கள்) மரங்களுக்கு பூஜை நடக்கும். பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாதவாசத்தின் போது இந்த மரங்களில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்கள் என்பதால் அரசர்கள் இந்த மரத்தை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அன்று அரசர்கள் செய்த வழிபாடு இன்றும் மைசூரு தசரா பண்டிகையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தசரா கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்ச்சியாக விளக்கொளி அணிவகுப்பு பன்னிமண்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் லேசர் காட்சிகள், கரணங்கள் போடுபவர்களின் சாகசங்கள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் மற்றும் குதிரையேற்றம் ஆகியவை இடம் பெறும். விளக்கொளி அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது அரசர் குதிரையேற்ற உடையில் குதிரை மீதமர்ந்து வந்து இராணுவ மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த நிகழ்ச்சி துவங்கும் சமயம் இரவுப் பொழுது வந்துவிடுமாதலால் நிறைய விளக்குகள் ஏற்றுவார்கள். அரசர் தனது இராணுவ பலத்தை தனது எதிரிகளுக்குத் தெரியப்படுத்தவும், மக்களிடையே ‘இத்தனை பலமுடைய நான் உங்கள் ராஜா; உங்களைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது’ என்ற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தவுமே இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

தசராக் கொண்டாட்டங்களில் தர்பார் ஒரு பகுதிதான் என்றாலும் பொதுமக்களுக்கு அரசரை அரியணையில் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம். என்னதான் சுதந்திரம் கிடைத்து, குடியரசாக நாடு மாறிவிட்டாலும், இன்னும் அரசர்களுக்கும், அரச குடும்பங்களுக்கும் இந்தியாவில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url