இன்று சரஸ்வதி பூஜை! இந்த நாளில் கலைமகளை வழிபட வித்தைகள் மேம்படும். எப்படிக் கலைமகளை வழிபடுவது?!.. வாங்க பார்க்கலாம்.
இன்று சரஸ்வதி பூஜை!
பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். பிறகு சரஸ்வதி பூஜை வரும் நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையை வழக்கமான முறையில் துவங்க வேண்டும். சிலர், சரஸ்வதி தேவியின் திரு உருவத்தின் முன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.
இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார வேண்டிக்கொண்டு, உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவது சிறப்பு. இயன்றவர்கள் கீழ்கண்ட துதிப்பாடலை சொல்லலாம்.
கலைமகள் துதிப்பாடல்.. "மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே"
பின்குறிப்பு: சாஸ்திரப்படி, சரஸ்வதி பூஜை அன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு. வியாபாரிகள் தங்கள் வியாபாரம் கெடாமல் மாலையில் பூஜைகளை செய்து கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.