Search This Blog

இந்தியாவுக்கு ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டது?


ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்று சொன்னாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை நம் நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ‘இந்தியாவின் சுதந்திர தினம்’ தான். இந்த நிலையில், இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை வருகிற 15 ஆம் தேதி கொண்டாட உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் - சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.


பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் தர முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசு ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையின் லாஹோரி கேட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 15ஆம் தேதியன்று இந்திய பிரதமரால் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டு, நாட்டு மக்களிடம் பிரதமர்கள் உரையாற்றுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஏன் ஆகஸ்ட் 15ஆம் தேதி?

இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு நெடியது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஏராளம். பல ஆண்டுகால அகிம்சை போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க முடிவெடுத்த ஆங்கிலேய அரசு, ஜூன் 30, 1948 அதிகாரத்தை மாற்றுவதற்கான பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. ஆனால், முன் கூட்டியே, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியே சுதந்திரம் வழங்கும் முடிவை மவுண்ட்பேட்டன் பிரபு எடுத்தார்.

இதுகுறித்து சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி கூறியதாவது, “முன் கூட்டியே சுதந்திரம் வழங்கும் முடிவை மவுண்ட்பேட்டன் பிரபு எடுத்தார். சுதந்திரத்தின் போது, ரத்தக்களரி அல்லது கலவரம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய விரும்பியதால் அவர் இந்த முடிவை எடுத்தார். ஜூன் 1948 வரை அவர் காத்திருந்திருந்தால், நம்மிடம் மாற்றுவதற்கான எந்த அதிகாரமும் இருந்திருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்திய சுதந்திர மசோதா ஜூலை 4, 1947 இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய சுதந்திர நாடுகள் உருவாகின.” என்று மவுண்ட்பேட்டன் பிரபு தெரிவித்திருக்கிறார்.

Freedom at Midnight எனும் புத்தகத்தில் இந்தியாவுக்கான சுதந்திரம் வழங்கிய தேதி பற்றி மவுண்ட்பேட்டன் பிரபு கூறிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், “இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய தேதி முற்றிலும் எதிர்பாராதது. செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்வியின் போது, அந்த தேதியை நான் தேர்ந்தெடுத்தேன். என்னிடம் முழு பொறுப்பும் இருந்தது. சுதந்திரம் வழங்க நாங்கள் ஒரு தேதியை நிர்ணயித்திருக்கிறோமா என்று அவர்கள் கேட்டபோது, அது விரைவாக நடக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணவோட்டத்தில் இருந்தது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சரியான தேதி குறித்து நான் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தேன். எனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதி என்று அப்போது அறிவித்தேன். ஏனென்றால், இரண்டாம் உலகப் போரில் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அது.” என்று மவுண்ட்பேட்டன் பிரபு கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நாள் முதலில் அபசகுணமாக பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கத்திய முறைப்படி, நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்கப்பட்டதால், இந்தியாவில் அது மங்கலகரமான நாளாக அமைந்து விட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டிய நேரு, கூட்டத்தொடரை நள்ளிரவு வரை தொடர்ந்து நடத்தி சாஸ்திர ரீதியாக இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எப்படி ஆகஸ்ட் 14 சுதந்திர தினம்?

ஆனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது எப்படி என்ற கேள்வி எழலாம். உண்மையில் அது இல்லை. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இந்திய சுதந்திர மசோதா ஆகஸ்ட் 15ஆம் தேதியையே இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சுதந்திர தினமாக வழங்கியது. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் முத்திரையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. முகமது அலி ஜின்னா தனது முதல் உரையின்போது, “ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாகிஸ்தானின் பிறந்த நாள். கடந்த ஆண்டுகளில் பெரும் தியாகங்களைச் செய்த முஸ்லிம் தேசம், தனது தாயகத்தை பெற்ற நாள்.” என்று பேசியுள்ளார்.

ஆனால், 1948 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதியை சுதந்திர தினமாக பாகிஸ்தான் கொண்டாடி வருகிறாது. பாகிஸ்தானுக்கான அதிகார மாற்றம் 1947 ஆகஸ்ட் 14இல் நடைபெற்றது. அதே நாள் முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இதில் எதோ ஒரு காரணத்துக்காக பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடுவதாக கூறுகிறார்கள்.

எது எப்படியோ, இந்தியாவும், பாகிஸ்தானும் தாங்கள் கடினமாக போராடி பெற்ற சுதந்திரத்தை தேசபக்தியுடன் கொண்டாடுகின்றன. இரு நாட்டிற்கும் கிடைத்திருக்கும் சுதந்திரத்திற்கான பலன்களை ஒப்பிடும் போது, தேதிகளின் பங்கு குறைவான முக்கியத்துவத்தையே கொண்டுள்ளன. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url