உலகத்தின் முதல் தொல்காப்பிய தூதரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் இரட்டை சகோதரிகள்
இவர்கள் தமிழ் சங்கம் நடத்தும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்று உள்ளனர். மேலும் இவர்கள் திருக்குறள் மட்டும் அல்லாமல் திருப்பாவை, தொல்காப்பியம், திருவாசகம் என பல தமிழ் நூல்களையும் கற்று வந்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் முழுமையாக தொல்காப்பியத்தை கற்ற இந்த இரட்டை குழந்தைகள் புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் திருக்குறள் சமுதாய மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொல்காப்பியம் மனன முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்று தொடர்ந்து 12 மணி நேரம் ஆறு சுற்றளவில் தொல்காப்பியம் ஒப்பித்து சாதனை படைத்துள்ளனர்.
உலகத்தில் முதன் முதலாக தொல்காப்பியம் முழுவதும் ஒப்பித்த சிறுமிகளை வாழ்த்தி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் "தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை வழங்கியுள்ளது.
உலகத்தில் மாணவிகள் இருவர் தொல்காப்பிய காப்பியத்தை முழுவதுமாக ஆறு சுற்று அமைவில், மனனம் முறைமையில் முற்றோதல் செய்துள்ளது இதுவே முதன்மை மற்றும் உலகச் சாதனையும் கூட.
இந்த நிகழ்வினைக் கண்காணித்த, புதுச்சேரி அகில இந்தியா உலகச் சாதனை பதிவு மையத்தின் நிறுவனர் , தலைவர், உலகச் சாதனை நாயகர் திருக்குறள் முனைவர் வெங்கடேசன் இவ்விரு மாணவிகளை வாழ்த்தி, \"தொல்காப்பியத் தூதர்\" என்னும் உயரிய விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி என்ற இரு சிறுமிகள் உலகிலேயே முதன் முறையாகத் "தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிறுமிகளின் தாயாரான ஜெயமணி கூறுகையில், " மிகவும் ஏழ்மையானது எனது குடும்பம். எனக்கு தமிழ் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் இருந்து வந்தது. ஆனால், எனது குடும்ப வறுமையினால் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனது குழந்தைகளாவது முழுமையாக தமிழில் உள்ள அமிர்தத்தை பெற வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே அவர்களுக்கு தினமும் திருக்குறள் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். இன்று அவர்கள் தேறி விட்டார்கள். தொல்காப்பியம் முழுவதும் கற்றுக் கொண்டு உலக சாதனை செய்துள்ளார். எனது மகள்கள் கல்லூரி வரை தமிழ் படிப்பதை விட மாட்டார்கள்" என்று பெருமிதத்தோடு கூறினார்.