5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்தா?
5ஜி என்றால் என்ன?
5ஜி என்பது தொலைத்தொடர்பு இணைய இணைப்பின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். இது, மிக விரைவாக தரவிறக்க, பதிவேற்ற வழி செய்கிறது.
மேலும் ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் தொலைத் தொடர்பு இணையத்தை அணுக அனுமதிக்கிறது. இதைச் செய்ய, இது ரேடியோ சிக்னல்களை நம்பியுள்ளது.
எப்படி விமானப் பயணத்தை சீர்குலைக்கும்?
அமெரிக்காவில், 5ஜி க்கு பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகள் C-Band எனப்படும் அலைவரிசை பகுதியைச் சேர்ந்தவை.
இந்த 5ஜி அலைவரிசையும், விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடியோ அல்டிமீட்டர்களின் அலைவரிசையும் கிட்டத்தட்ட ஒரே எண்களைக் கொண்டுள்ளன.
இதனால் விமானம் தரையிறங்கும் போது பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ரேடியோ அல்டிமீட்டர் என்பது தரையில் இருந்து விமானம் உள்ள உயரத்தை அளவிட்டு பாதுகாப்பான முறையில் விமானத்தை தரை இறக்க உதவும் கருவியாகும்.
இடர்பாடுகள் ஏற்படும்போது எப்படி பாதுகாப்பாக விமானத்தை தரை இறங்கச் செய்வது?
5ஜி அலைவரிசை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது அதனால் இடர்பாடு ஏற்படும் அபாயம் உள்ள சூழ்நிலைகளில் ரேடியோ அல்டிமீட்டர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
ஆனால், எல்லா நேரத்திலும் அல்டிமீட்டர் பயன்பாட்டை கைவிட முடியாது. குறிப்பாக விமான ஓடு தளத்தில் அதிக பனிமூட்டம் இருக்கக் கூடிய சூழலில் விமான ஓடுதளம் கண்களுக்கு தெரியாது.
இதனால் பாதுகாப்பாக விமானத்தை தரை இறக்குவதில் சிக்கல் ஏற்படும். அதுபோன்ற தருணங்களில் ரேடியோ அல்டிமீட்டர்களின் தேவை இன்றியமையாததாக இருக்கும் என்கிறார்கள்.
10 முன்னணி விமான நிறுவனங்களை உள்ளடக்கிய Airlines for America, என்ற அமைப்பு கூறுகையில் மோசமான வானிலையின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்க பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்கிறது.
இது போன்ற கட்டுப்பாடுகளால் அமெரிக்க விமானப்படை விமானங்கள்கூட 'பயன்படுத்த முடியாததாக" போகும் என்கிறது அந்த அமைப்பு.
5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன கூறியுள்ளன?
வெரிசோன் மற்றும் ஏடிரூடி ஆகியவை 5ஜி அலைவரிசை தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்காலிகமாக இதை நாங்கள் தாமதப்படுத்துகிறோம் என்கிறார்கள்.
குறிப்பாக ஏடிரூடி நிறுவனம் விமான ஓடு தளங்கள் அருகே கோபுரங்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துவிட்டால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்றும் அதிகமாக தொழில்நுட்ப இடர்பாட்டை ஏற்படுத்தக்கூடிய 5ஜி தொழில்நுட்ப கோபுரங்களை ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இயக்க வேண்டாம் என்றும் முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
இதனால் தற்போது எந்த விதமான பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. இது சம்பந்தமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இந்த பிரச்சனையால் 10 சதவீத 5ஜி தொழில்நுட்ப கோபுரங்கள் மட்டுமே செயல்படாது என்றார்.
வெரிசோன் மற்றும் ஏடிரூடி நிறுவனங்கள் ஏற்கனவே இரண்டு முறை 5ஜி வெளியீட்டை ஒத்திவைத்திருந்தன, மேலும் மேலே குறிப்பிட்டுள்ள 'பஃபர் சோன்" பகுதிகளில் இதை செயல்படுத்த போவதில்லை என்றும் ஒப்புக்கொண்டன.
இரண்டு நிறுவனங்களும் சமீபத்திய இடைநிறுத்தம் குறித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளன. 5ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடங்குவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏடிரூடி தெரிவித்துள்ளது.
சுமார் 40 நாடுகளில் ஏற்கனவே 5ஜி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த மாதம் அமெரிக்க வயர்லெஸ் தொழில் அமைப்பான CTIA விமானத் துறையினர் அதிகமான பயத்தை ஏற்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டியது.
மேலும் இப்படியே இது தொடர்ந்தால் 5ஜி அறிமுகத்தை தாமதப்படுத்துவது உண்மையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்தது.