கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் :
கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள் : கணக்கு போட்டு வாழ்ந்தால் படிப்பு, வாழ்க்கை சிறக்கும்
கணக்கு... பள்ளி காலங்களில் நம்மை போட்டு பார்க்கும் பாடம் கணக்கைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல், அல்ஜீப்ரா என பல போகப்போக தலை சுத்தி விழுபவர்கள் தான் அதிகம். ஆனால், அதே கணிதத்தை ஆர்வமாக பயின்று மேதையாக வாழ்ந்தவர் ராமானுஜம். அவருக்கு நாளை 132வது பிறந்தநாள். அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமா?:
கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887, டிச.22ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாச ஐயங்கார், தாய் கோமளத்தம்மா.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு ராமானுஜத்தின் குடும்பம் இடம் மாறியது. இளம் வயதிலேயே கணிதத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் ராமானுஜம். இவரால் தீர்க்க முடியாத கணக்கே இல்லை என்று கூறுமளவுக்கு கணக்கில் புலியாக திகழ்ந்தார்.
9ம் வகுப்பிலேயே பட்டப்படிப்பின் கணக்குகளை போட்டு காட்டி மிரள வைத்தார். இதனால் அப்போதே இவரை பலர் கணித மேதையாக கருதத்தொடங்கினார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார். படிப்பை முடித்த பின் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கணித தேற்றங்களை எழுதி கலக்கினார். ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது. 1909ல் இவர் ஜானகியை மணந்தார். தேற்றம் எழுதி வந்த இவர், குடும்ப சூழலுக்காக வேலைக்கு சென்றார். அங்கேயும் அவர் கணித ஆர்வத்தை மறக்கவில்லை. ‘பெர்நெவுவியன் எண்கள்’ என்ற கணிதத்துறை தொடர்பான கட்டுரையை வெளியிட்டு பிரமிக்க வைத்தார்.
இதை அறிந்த சென்னை துறைமுக கழக பொறுப்பு தலைவர் ஸ்பிரிஸ் என்ற ஆங்கிலேயர் கணித குறிப்புகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். இதை படித்து பார்த்து வியந்த பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி என்பவர், இங்கிலாந்துக்கு வரும்படி ராமானுஜத்துக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற அவர், 1914ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று பல கணித மேதைகளுடன் உரையாடினார். அங்கு கிடைத்த உதவித்தொகை மூலம் டிரினிட்டி கல்லூரியில் பயின்றார்.
அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிர செய்தார். உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920ல் மறைந்தார். ஆம்... 33 வயதில் அவர் உயிர்நீத்தார். கடந்த 2012ம் ஆண்டு ராமானுஜரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22ம் தேதியை தேசிய கணித தினமாகவும் அரசு அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி கணித தினம் கொண்டாடப்படுகிறது.
‘கணக்கில் தேர்ந்தவர், வாழ்க்கையிலும் அசத்துவான்’ என்பார்கள். கணிதத்தை எளிதாக புரிந்து கொள்ளும் சூத்திரத்தின் அடிப்படையில் படிக்க வேண்டும். அதற்கென நிபுணர்களிடம் அதை கற்றுத்தேர்ந்தால் உங்களை யாராலும் வெல்ல முடியாது... பாடத்தில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் வரவு - செலவுகளை கணக்கு போட்டு பார்த்து, திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் ஜொலிக்கலாம்.
நன்றி: தினகரன் நாளிதழ்