அக்டோபர் 1 சர்வதேச முதியோர் தினம் ( International Day of Older Persons) :
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் ( International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1, 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
நோக்கம் :
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும்,
குடும்பம், சமூகம் மற்றும்
நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு,
ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.
முதியோர் நலன் :
பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
உலக அளவில் :
1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதியோர்களுக்கும்
உணவு , உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.
அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.
இந்திய அளவில் :
பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
இந்த சட்டம் வழங்குவது :
தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு
உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.
கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.
மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.
தமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள் :
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.
65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.