Search This Blog

ஜூன் மூன்றாவது ஞாயிறு - உலக தந்தையர் தினம்:



தந்தையர் தினம்:

ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பெறுகின்றது. உலகிலேயே முதல் முறையாக 1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்மணியே. இத் தினம் இவ்வருடம் ஜூன் மாதம் 17ம் நாள் அமைகின்றது.

எப்படி வந்தது:

1909ம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள சர்ச்சில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட அவர்; தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு வெள்ளை ரோஜா வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ம் ஆண்டு, ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அதிபர் நிக்சன் அறிவித்தார்.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினமும் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானதாகும்.
அன்னையர் தினம் தற்பொழுது ஆசிய நாடுகளில் பிரபலமாகியுள்ளதைப் போல தற்போது தந்தையர் தினமும் இங்கும் கொண்டாடப்படுகிறது.

முதியோர் இல்லம் என்றில்லை, வீட்டுக்குள் நுழைந்தால் மருமகள் என்னசொல்வாளோ? இல்லைமருமகள் பேச்சைக்கேட்டு மகன் என்னசொல்வானோ என்று கால்வயிற்றையும் அரைவயிற்றையும் நிரப்பிக்கொண்டு திண்ணையே கதி என்றிருக்கும் தந்தைமார்களுக்கு வருடத்தில் இந்த ஒருநாளாவது சுபதினமாக இருக்கலாம், என்றால் “தந்தையர் தினம்” கட்டாயம் கொண்டாடியே ஆக வேண்டும்.

தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற ஔவையின் வைர வரிகளும்,
அன்னையோடு அறுசுவை போம் தந்தையோடு அறிவு போம் என்ற முதுமொழியும் வெளிநாடுகளில் செயலிழந்து போயுள்ளது என்பது வெளிப்படை.

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்."

திருக்குறள்

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

உங்களுக்கும் வரலாம்:

தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார். பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. சிலர், முதுமை பருவத்தில் தந்தையை தவிக்க விடுகின்றனர், இது தவறு. இன்று பிள்ளையாக இருப்போர், நாளை தந்தையாக மாறுவர். எனவே இந்நிலைமை யாருக்கும் வரலாம் என்பதை நினைவில் வைத்து தந்தைக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும்.

அப்பாவுக்கு அன்பு பரிசு:
தந்தையர் தினத்தை முன்னிட்டு அப்பாவிற்கு பரிசளிக்க விரும்புகிறீர்களா? ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா?
* நம் நினைவுகளை நெஞ்சோடு பத்திரப்படுத்த, பணத்தோடு "பர்ஸ்' பரிசளிக்கலாம்.
* கீதையும், குரானும், பைபிளும், நன்னெறி புத்தகங்களும் தரலாம்.
* சிறுவயதில் கைப்பிடித்து நடந்ததை நினைவுகூற, "வாட்ச்' தரலாம்
* விரும்பிய இடத்திற்கு சிறு சுற்றுலா அழைத்து செல்லலாம். முடிந்தால் அப்பா பிறந்த கிராமத்திற்கு, குடும்பத்தோடு செல்லலாம்.
* போட்டோவுடன் "கீ செயின்'
* நினைத்த நேரம் பேசி மகிழ, மொபைல் போன்
* எதுவும் வாங்காவிட்டாலும், அன்பான வார்த்தைகள் பேசலாம். காலில் விழுந்து வணங்கலாம்.
தெய்வம் இருப்பது எங்கே?
* வாழும் தெய்வங்கள் (பெற்றோர்) இருப்பது வீட்டில் தான். கோயிலில் தேட வேண்டாம்.
* எட்டி உதைத்த கால்களை, கட்டி அணைத்து கொஞ்சிய அப்பாவுக்கு... முதியோர் இல்லம் தான்... நீங்கள் தரும் பரிசா? உங்கள் பிள்ளையிடம், இந்தப் பரிசை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
* வாலிபம் தொலைந்து வயதாவது இயற்கை. நாளை நமக்கும் தான். சிறுவயதில் நம்மை தாங்கியவருக்கு, முதுமையில், நாம் கொஞ்சம் தாங்கிப் பிடிக்கலாமே.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url