திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி நூலகம் பற்றிய செய்திகள் TNPSC,
திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி
இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கி.பி.(பொ.ஆ.) 1990ஆம் ஆண்டு இப்பணி தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது.
பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது. அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை தொண்ணூற்றைந்து அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது. திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்குப் படகு வசதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது.