சந்திர கிரகணம் சுவாரஸ்ய தகவல்கள்!
சந்திர கிரகணம் சுவாரஸ்ய தகவல்கள்!
"நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை அன்று முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்."
இந்தியாவில், இது பிற்பகல் 2.48 மணிக்குத் தொடங்கி மாலை 06:18 மணிக்கு முடிவடையும். இந்தியா மட்டுமின்றி மற்ற ஆசிய நாடுகளும் இந்தக் கிரகணத்தை காண முடியும். இருப்பினும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தை காண முடியும். டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தை மட்டுமே காண முடியும். கிரகண வேளையில் ஜோதிட கட்டத்தில் சந்திரனுடன் ராகு இணைந்து இருப்பார். அதாவது, ராகு உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்கிறது. அதே போல, சந்திர கிரகணம் பெளர்ணமி காலத்தில் நிகழும் என்பதால், ஜோதிட கட்டத்தை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் சந்திரனில் இல் இருந்து எண்ணி 7 ஆம் இடத்தில் சூரியன் இருப்பார். அதுவே, சந்திரன் மற்றும் சூரியன் ஜாதக கட்டத்தில் இணைந்து இருந்தால் அந்த சமயம் அமாவாசை காலமாக இருக்கும். அதனால் தான் ஜோதிடத்தை ஒருவகையில் அறிவியல் என்கிறோம்.
கிரகண காலத்தில் சந்திரன் ஏன் நிறம் மாறுகிறது?: விஞ்ஞானத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க, உங்களுக்குச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. சந்திர கிரகணத்தை நேரடியாகக் கண்களால் பார்க்க முடியும். தொலைநோக்கியின் பயன்பாடு சந்திர கிரகணத்தின் பார்வையை மேம்படுத்தும். நேரடியாகப் பார்க்க முடியாதவர்கள், நாசா உள்ளிட்ட பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிடும் நேரலை வீடியோக்களையும் பார்க்கலாம். சாஸ்திரப்படி சந்திர கிரகணத்தில் செய்யக் கூடாதவை: ஜோதிட நம்பிக்கையின்படி இவை அறிவுறுத்தப்பட்டாலும், இதைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும். முடிந்த வரை கிரகணத்தின்போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். முக்கியமான ஒப்பந்தங்களை கையெழுத்து இடுவது போன்ற பல நல்ல விஷயங்களை கிரகண காலத்தில் ஆரம்பித்தால் தடைபடும் என்பது நம்பிக்கை. கிரகணத்தின்போது தூங்கக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது. இதேபோல, கிரகண காலத்தில் நீண்ட நாள் நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம். அந்த சமயம் தன்வந்திரி மந்திரம் ஜபிக்கலாம். அதில் தவறு இல்லை. கிரகணத்தின்போது கோவில்களில் இறை வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வீட்டின் பூஜையறையின் கதவுகளையும் மூட வேண்டும். இது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. கிரகணத்தின்போது பயணத்தை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு சமைத்த உணவைச் சாப்பிடக் கூடாது என்பது நம்பிக்கை. இருப்பினும் கிரகண நேரத்தின்போது சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்த்திடவும்.
பின்குறிப்பு : மேற்படி, இவை எல்லாம் தொன்று தொட்டு சொல்லப்படும் ஆன்மீக வாதிகளின் நம்பிக்கை. ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பவர்கள் கடைபிடிக்க விருப்பப் பட்டால் கடைபிடிக்கலாம்.