Search This Blog

திருப்பதியில் பெருமாளுக்கு ஏன் 'லட்டு' படைக்கப்படுகிறது?


"திருப்பதியில் பெருமாளுக்கு ஏன் 'லட்டு' படைக்கப்படுகிறது?!"


"திருப்பதிக்கே லட்டா?"" என்று நம்மில் பலர் வேடிக்கையாகக் கேட்க நாமும் அதனை கேட்டு இருப்போம். தத்துவ அடிப்படையில், 'லட்டு' ஒரு புவிசார் குறியீடு. லட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘ லட்டுக்கா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது. அதிலும், திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாரி லட்டு, திருப்பதி தேவஸ்தானத்துக்கு உரிமையான பொட்டு என்ற திருமடப்பள்ளியில் தயாராகிறது. 2016-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.


பிரபலமானவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் 750 கிராம் அளவு கொண்ட ஆஸ்தான லட்டு, ஏழுமலையான் கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கும் உபயதாரர்களுக்கு வழங்கப்படும் கல்யாண உற்சவ லட்டு, பக்தர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 175 கிராம் அளவுள்ள புரோக்தம் லட்டு என மூன்று வகை லட்டுகள் திருப்பதியில் தயார் ஆகிறது.

1996-ம் ஆண்டு வரை இந்த லட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்தவர்கள் திருமலை கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். அதன்பிறகு தேவஸ்தானமே தயாரிக்கத் தொடங்கிவிட்டது. 51 பொருள்கள் கொண்டு சுத்தமாகத் தயாரிக்கப்படும் இந்த லட்டு பிரசாதம் வேறெங்குமே கிடைக்காத சுவையைக் கொண்டது. நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுகளைக் கூட தயாரிக்கும் அளவுக்கு இன்று வெகு நவீனமாக திருப்பதி லட்டு தயாரிக்கும் கூடம் உருவாகிவிட்டது. 200க்கும் அதிகமான ஊழியர்கள் லட்டுகளை எந்திரங்களின் உதவியோடு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில், பல கோயில்களில் பல விதமான பிரசாதங்களை நாம் உண்டு இருப்போம். சில இடங்களில் புற்று மண் கூடப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றுள் ராஜவகை பிரசாதம் என்று சொன்னால், அது திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு ஒன்றுதான். அந்த லட்டின் சுவையும் மணமும் அலாதி எனலாம். அதனை வேறு எங்கும் செய்ய முடியாது.

இந்த நாளில் ஏன் திருமலையப்பனுக்கு 'லட்டு' பிரசாதமாக வழங்கப்படுகிறது?!.. அதன் சுவையான வரலாறு என்ன?!.. என்று அதைப் பற்றித் தான் இப்போது பார்க்க இருக்கிறோம். திருப்பதி பெருமாள் கோயிலை புனரமைத்துக் கட்டிய தொண்டைமான் அரசன் காலத்திலேயே திருப்பதியில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்றும் பல்லவர் ஆட்சியில் முழு நேர உணவும் வழங்கப்பட்டன என்றும் வரலாறு கூறுகிறது. பிறகு 'திருப்பொங்கம்' என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏழுமலையானுக்கு வழங்கப்படும் தயிர் அன்னமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட காலமும் ஒன்று உண்டு என்கிறார்கள் பெரியோர்கள்.

பிறகு விஜயநகர ஆட்சியில் திருப்பதி முக்கியத்துவம் பெறத்தொடங்கி பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க பிரசாதங்களின் வகையும் மெல்ல, மெல்ல காலத்திற்கு ஏற்ப மாறத் தொடங்கியது. அந்த வகையில், 1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு அடை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது 1450-ம் ஆண்டு அப்பமாக மாறியது. 1460-ம் ஆண்டில் அது வடையாக மாறியது. இன்றும் கனமான வடையாக இது வழங்கப்படுகிறது. 1468-ம் ஆண்டு முதல் அதிரசம் பிரசாதமானது. 1547-ம் ஆண்டு மனோகரம் என்ற இனிப்பு முறுக்கு பலகாரம் பிரசாதமானது. இந்தக் கால கட்டத்தில் இருந்து தான், இனிப்பை ஏற்றுக் கொள்ள சித்தம் கொண்டார் பாலாஜி. அவர் விரும்பிய படியே, 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியில் இருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்பட்டது.

1803-ம் ஆண்டு முதல் அதுவே பூந்தியாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில், ஒரு அற்புத நாளில், திருப்பதி திருக்கல்யாண உற்சவ விழாவுக்கான திருக்கட்டளையை ஏற்ற பக்தர் ஒருவர் மடப்பள்ளியில் பணம் செலுத்தி கொண்டந்தா லட்டு எனும் மிகப்பெரிய லட்டுகளை ஆயிரக்கணக்கில் தயாரித்தார். அதை திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகவும் வழங்கினார். அதன் சுவையிலும் மணத்திலும் மயங்கிய பக்தர்கள் தேவஸ்தானத்தை அணுகி 'லட்டுவே' இனி பிரசாதமாகக் கிடைக்க வேண்டினர். 1940-ம் ஆண்டு முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்ய கல்யாண உற்சவம் தொடங்கியதால், கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மட்டும் பூந்திக்குப் பதிலாக லட்டு பிரசாதமானது.

1943-ம் ஆண்டு முதல் திருப்பதிக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் சனிக்கிழமை மட்டும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு லட்டு பிரசாதம் விலைக்கும் விற்கப்பட்டது. எட்டு அணாவுக்கு ஒரு லட்டு என்று விற்கத் தொடங்கிய லட்டு இன்று விலையும் உயர்ந்துவிட்டது, அளவும் குறைந்து விட்டது என்றாலும் சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே நிலைத்து இருக்கிறது.

ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைகளுக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்தப் பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url