Search This Blog

சர்வ பாவ விமோசனம் அருளும் சனிப் பிரதோஷம்


சனிப் பிரதோஷம்!


"சர்வ பாவ விமோசனம் அருளும் சனிப் பிரதோஷம்."

பிரதோஷம் என்றால்:

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திரயோதசி திதி தினத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதோஷ தினத்தில் தான் ஈசன், ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதுவே திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் அது சனி மகா பிரதோஷமாக மேலும் சிறப்படைகிறது.

சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை. காரணம் சனி பகவான் சிவ பக்தர். சிவனிடம் இருந்து ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர். அதனால், தான் இந்த நாளில் ஈசனை வில்வம் சாற்றி வழிபட சனியின் பிடி தளரும். துன்பம் அகலும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷம்.

பிரதோஷ காலத்தில் சோமசூக்தப் பிரதட்சணம் செய்வது மிகவும் விசேஷம். அதாவது, சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.

அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணங்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்தப் பிரதட்சண முறைக்கு 'பிரதோஷ பிரதட்சணம்' என்று பெயர். இதனை சனிப் பிரதோஷம் வரும் நாளில் செய்வது மேலும் விசேஷம்.

சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன் படி, நாமும் இந்த நாளில் தவறாமல் சிவ பெருமானை வணங்குவோம். சிவ அருள் பெறுவோம். ஓம் நமச் சிவாய.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url