Search This Blog

யானை - மனித மோதல்:

யானை - மனித மோதல்:

🐘 யானைகள் ரயிலில் அடிபட்டும், மின்வேலிகளில் சிக்கியும் உயிரிழப்பது அன்றாட செய்தியாகிவிட்டது. இந்தியாவில் கடந்த 2020 டிசம்பர் வரையிலான 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் யானைகளால் தாக்கப்பட்டு 3,767 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

🐘 யானை நிலத்தில் வாழும் மிகப்பெரிய வன விலங்கு. உலகளவில் ஆப்பிரிக்காவை அடுத்து ஆசியாவில் தான் யானைகள் அதிக அளவில் உள்ளன. 

🐘 ஆசிய கண்டத்தில் கிட்டத்தட்ட 50,000 ஆசிய யானைகள் உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 27,312 ஆசிய யானைகள் உள்ளன. இதில் தென்னிந்தியாவில் மட்டும் 11,960 யானைகள் உள்ளன.

🐘 இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவ்வாறு 2012-ல் சராசரியாக 30,000 யானைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 27,312 யானைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

🐘 யானைகளை இயற்கை பொறியாளர் என்கிறார் ஆய்வாளர் மோகன் ராஜ். மற்றும் அவர், யானைகள் சராசரியாக 250 கிலோ அளவிலான உணவை உட்கொள்கிறது. ஆனால், அவற்றில் 70 சதவிகிதத்தை சாணமாக வெளியேற்றி விடுகிறது. 

🐘 அவை உரமாகவும் மரங்கள் வளர்வதற்கு விதையாகவும் பயன்படுகிறது. யானை தனக்காக தயார் செய்யும் உணவில் பெரும் பகுதியை அப்படியே விட்டுச் செல்கிறது. அவை சிறிய விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. 

🐘 வன உணவுச் சங்கிலியில் யானையின் பங்கு முக்கியமானது. யானைகள் பயன்படுத்தாத காடுகளில் மனிதனால் நுழைய முடியாது. உணவிற்காகவும் காலநிலையைப் பொறுத்தும் யானைகள் ஒரு வனப்பகுதியிலிருந்து வேறு ஒரு வனப்பகுதிக்குச் செல்கின்றன என்றார்.

வலசைப் பாதை :

👉 யானைகளின் வாழ்விடம் என்பது ஒரே மாதிரியான காடுகளை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. யானைகளின் வாழ்விடங்கள் பல்வேறு வனப்பகுதிகளைச் சேர்த்து பரந்து விரிந்திருக்கும். காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் வனப்பகுதிகள் சுருங்கிவிட்டன, வனத்திற்கு அருகில் உள்ள நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டு பின்னர் விளை நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

👉 பட்டா நிலம், விளை நிலம் என்பதெல்லாம் மனிதர்களுக்கு தான், யானைகளுக்கு அந்த வேறுபாடு எல்லாம் தெரியாது. யானைகள் தங்களுடைய வாழ்விடங்களுக்குள் பயணிக்க தங்களின் பாரம்பரியமான வலசைப் பாதைகளைப் (Traditional Migrating Path) பயன்படுத்தும்.

👉 வாழ்விடங்கள் சுருங்கிய இடத்தைத் தான் வலசைப் பாதை என்கிறோம். வலசைப் பாதை சுருங்கிய இடங்களைத் தான் வழித்தடம் (Corridor) என்கிறோம். அதை இணைப்புப் பாதை என்று சொல்வது தான் சரி. 

யானைகளின் வழித்தடம் எது?

👉 Wildlife Trust of India நடத்தியுள்ள ஆய்வில் இந்தியா முழுவதும் 101 யானை வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் 28 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

👉 Wildlife Trust of India தயாரித்துள்ள பட்டியலில் உள்ளதைவிடவும் கூடுதலான யானை வழித்தடங்கள் உள்ளதாக சொல்கின்றனர். அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

👉 யானை வழித்தடத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தால் தான் அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்றி யானை பயணத்திற்கு தடை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

யானை வழித்தடங்களை அங்கீகரிப்பது எப்படி?

🐘 நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகுர் வழித்தடத்தை யானைகளின் வழித்தடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் யானை வழித்தடம் இது தான். இது ஒரு முக்கியமான முடிவு. அதைப்போலவே மற்ற யானை வழித்தடங்களையும் மீட்டு பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🐘 முதுமலை வனப்பகுதியிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்குச் செல்லும் யானைகள் கோவை மாவட்டம் கல்லார் வழியாகத் தான் செல்கின்றன. அங்கு தான் ஊட்டி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான யானை வழித்தடம் இது. இங்கு வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் யானைகள் நடமாட்டம் தடைபடுகிறது.

🐘 இதனால் கல்லாரிலிருந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை 2.4 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. யானை வழித்தடங்களை மீட்பதற்கான பல முயற்சிகளில் இதுவும் ஒன்று என்கின்றனர் வனத்துறையினர். 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url