சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அப்படி இருக்க எதன் அடிப்படையில் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைவதாகச் சொல்கிறோம்?
சூரியன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே பூமியின் மீது குறிப்பிட்ட புள்ளியில் நாம் இருக்கும்போது கிழக்கே சூரியன் உதித்து மேற்கே மறைவது போலத் தென்படுகிறது. பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது, தொலைவில் உள்ள தந்திக் கம்பங்கள் பின்னோக்கிச் செல்வது போல தோற்ற மயக்கம் ஏற்படும். இவ்வாறுதான் சூரியன் உதித்து மறையும் நிகழ்வும் ஏற்படுகிறது.
நடு இரவு பன்னிரண்டு மணி என்றால், சூரியன் நம் காலடி திசையில் பூமியின் மறுபக்கத்தில் உள்ளது என்று பொருள். பூமி தன்னைத் தானே சுற்றி வரும்போது சூரியனை நோக்கி நாம் இருக்கும் புள்ளி நகரும். குறிப்பிட்ட கட்டத்தில் நாம் இருக்கும் புள்ளியின் அடிவானத்தில் சூரியன் தென்படும். இதைதான் சூரியன் உதிக்கிறது என்கிறோம். பின்னர் நமது புள்ளி சூரியனை நோக்கிச் சுழலும். எனவே வானில் சூரியன் உள்ள கோணம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் கோணம் சுமார் தொண்ணூறு டிகிரி வரும்போது, சூரியன் நமது தலைக்கு மேலே இருக்கும். இதுவே நடுப்பகல். பின்னர் மேற்கு திசையில் சூரியனது கோணம் குறைந்துகொண்டே செல்லும். இறுதியில் மேற்கு அடிவானில் சூரியன் காட்சி தருவதை சூரியன் மறைகிறது என்கிறோம். அதன் பின்னர் இரவு சூழ்ந்துவிடும். சூரியன் பூமியின் மறுபக்கம் நோக்கி இருக்கும்.