தலைசிறந்த கணித விருதுகள்: பீல்ட்ஸ் பதக்கம்
உலகின் முக்கியமான கணிதவியலாளர்கள் ஒரே இடத்தில் கூடும் சர்வதேச கணித மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன் தொடக்க விழாவில் ‘பீல்ட்ஸ் பதக்கம்’ எனும் தலைசிறந்த பரிசு, 1936- முதல் வழங்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் ‘பீல்ட்ஸ் பதக்கம்’ தவிர ‘நெவன்லினா பரிசு’, ‘கவுஸ் பரிசு’, ‘செர்ன் பதக்கம்’, ‘லீலாவதி பரிசு’ போன்ற ஏனைய கணிதப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. தலைசிறந்த கணித சாதனைகளைப் படைத்த அறிஞர்களுக்கு சர்வதேசக் கணித கழகம் ( >www.mathunion.org) என்ற அமைப்பு பரிசுகளை வழங்கி கவுரவிப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
கணித மேதைகளின் சங்கமம்:
பெலிக்ஸ் கிளைன், ஜார்ஜ் கேண்டார் ஆகிய இரு கணித மேதைகளின் முயற்சியில், ஜெர்மனி நாட்டின் ஜூரிச் நகரில் ஆகஸ்ட் மாதம் 1897-ல் ஆண்டில் முதல் சர்வதேச கணித மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாடு, முதல் உலகப் போரின் தாக்கத்தால் 1916-ம் ஆண்டில் தடைபட்டது. மீண்டும் 1920-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்தது. 1936-க்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட காரணங்களால் பதினான்கு ஆண்டுகள் நடைபெறவில்லை. 1950-ம் ஆண்டு முதல் தவறாமல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதை கணித மேதைகளின் சங்கமமாகக் கருதலாம்.
கணித வள்ளல்:
1924-ல் நடைபெற்ற சர்வதேச கணித மாநாட்டில் கனடா நாட்டின் கணித அறிஞர் ஜான் சார்ல்ஸ் பீல்ட்ஸ் கணிதத்தில் மாபெரும் சாதனைப் படைக்கும் இளம் மேதைகளுக்கு ஒவ்வோர் மாநாட்டிலும் நோபல் பரிசுக்கு இணையான பரிசை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கு அனைவரும் சம்மதிக்கவே, அப்பரிசுக்கான செயல்திட்டத்தை பீல்ட்ஸ் ஏற்படுத்தினார்.
அதிக அளவில் பணம் தேவைப்படும் என உணர்ந்த பீல்ட்ஸ், தனது முழு சொத்தையும் (நோபல், நோபல் பரிசுக்கு வழங்கியது போல) வழங்கினார். இந்தச் செயலுக்காக இன்றளவும் அவரை கணித வள்ளலாகக் கருதுகின்றனர். மேலும், அவரது கொடையை அங்கீகரிக்கும் வகையில், அவர் பெயரிலேயே ‘பீல்ட்ஸ் பதக்கம்’ என அழைத்தனர்.
விதிமுறைகள்:
எந்த நாட்டிலிருந்தும் மிகச் சிறந்த கணிதக் கோட்பாடுகளை ஏற்படுத்தும் நாற்பது வயதுக்குட்பட்ட கணித அறிஞர்களுக்கு ‘பீல்ட்ஸ் பதக்கம்’ வழங்கப்படும். இதைப் பெறத் தகுதியானவர்களை சர்வதேச கணிதக் கழகம் முடிவு செய்கிறது.
பரிசுத்தொகை:
2006-ம் ஆண்டு முதல் பீல்ட்ஸ் பதக்கம் பெறுபவர்களுக்கு 15,000 கனடா நாட்டு டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தியப் பணத்தின் மதிப்புப்படி இது கிட்டத்தட்ட ஏழரை லட்ச ரூபாய். நோபல் பரிசின் தொகையை விட மிகக் குறைந்த அளவிலேயே அமைகிறது. ஆனால், கணிதத்துக்காக வழங்கப்படும் ஏபல் பரிசு, நோபல் பரிசுக்கு இணையாகவும், அதே விதிமுறைகளுடனும் அமைகிறது. எனினும், இளம் கணித மேதைகளுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய கணிதப் பரிசாக இன்றளவும் பீல்ட்ஸ் பதக்கத்தைக் கருதுகின்றனர்.
1936 முதல் 1962 வரை ஒவ்வொரு ஆண்டும் இரு நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட பீல்ட்ஸ் பதக்கம், 1966 -ம் ஆண்டு முதல் (கணிதத்தின் அதிகப் பயன்பாடுகள் மற்றும் ஆய்வு முடிவுகளினால்) தற்சமயம் வரை அதிகபட்சமாக நான்கு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
சியோல் மாநாடு:
2014-ம் ஆண்டில், ஆகஸ்ட் 13 முதல் 21 வரையிலான ஒன்பது நாட்களில் தென் கொரியாவில் அமைந்த சியோல் நகரில் சர்வதேச கணித மாநாடு ஆகஸ்ட் 13 அன்று கோலாகலமாகத் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க விழாவில் பீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற நான்கு நபர்கள் அறிவிக்கப்பட்டார்கள். அதே போல் மற்ற பரிசுகளை வென்ற நபர்களையும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஆர்தூர் அவிலா, மஞ்சுல் பார்கவா, மார்டின் ஹைரேர், மர்யம் மிர்சாகாணி என்ற நான்கு இளம் கணிதவியலாளர்கள் 2014 -ம் ஆண்டுக்கான பீல்ட்ஸ் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர். கணிதப் பயன்பாடு சார்ந்த கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவியல் பங்களிப்புக்கு வழங்கப்படும் நெவன்லினா பரிசை சுபாஷ் கோட் என்பவர் வென்றார். கணிதத்தில் வாழ்நாள் சாதனை படைத்த அறிஞருக்கு வழங்கப்படும் கவுஸ் பரிசை ஸ்டான்லி ஒஷர் தட்டிச்சென்றார். அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற கணிதக் கருத்துகளை படைத்திருக்கும் கணிதவியலாளருக்கு வழங்கப்படும் செர்ன் பதக்கத்தை பிலிப் கிரிப்பித்ஸ் வென்றார். கணிதத்தை உலகெங்கும் பிரபலப்படுத்தி அதனை பொதுமக்களுக்கு எளிமையாக கொண்டு சேர்த்து, கணிதப் புகழ் பரப்பும் கணிதவியலாளருக்கு வழங்கப்படும் லீலாவதி பரிசை அட்ரியேன் பியான்சா வென்றார்.

இந்தியாவுக்கு பெருமை:
பீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற மஞ்சுல் பார்கவாவும், நெவன்லினா பரிசை வென்ற சுபாஷ் கோட் என்பவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் 2010-ம் ஆண்டில், இதே சர்வதேச கணித மாநாடு இந்தியாவில் அமைந்த ஹைதராபாதில் நடைபெற்றது. ஆனால், இந்தியாவில் இருக்கும் கணிதவியலாளர்கள் எவரும் இந்தப் பதக்கத்தை இது வரையில் பெறவில்லை என்பது வருத்தமே.
2014-ம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில், மரியம் மிர்சாகாணி என்ற பெண் பீல்ட்ஸ் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதே மாநாட்டில் மஞ்சுல் பார்கவா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில், பீல்ட்ஸ் பதக்கம் வென்ற முதல் நபராகத் திகழ்கிறார். ஆர்தூர் அவிலா என்பவர் பீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற முதல் தென் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.
2018-ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அடுத்த சர்வதேச கணித மாநாடு பிரேசில் நாட்டில் அமைந்த ரியோ - டி - ஜெனேரியோ என்ற நகரில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.