எண் கணித பிதாமகன் எஸ்.எஸ். பிள்ளை
- ஒரு காலத்தில் செழுங்கோட்டையாக விளங்கிய நகரம் செங்கோட்டை. கேரளத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் உதிர்ந்து விழுந்த ஒரு நிலாத்துண்டு. தென்னையும், புன்னையும், வாழையும் மயங்கிக் கிடக்கும் வளமார்ந்த பூமி.
- இந்த செங்கோட்டை மண்தான் சுதந்திர இந்தியாவுக்கு வீரவாஞ்சிநாதனையும், இசைக்கு ஒரு கிட்டப்பாவையும், கணிதத்திற்கு ஒரு எஸ்எஸ் பிள்ளையையும் இவ்வுலகிற்கு தந்தது. கிட்டப்பாவின் புகழ் தமிழ்நாட்டோடு நின்றது. வீர வாஞ்சியின் புகழ் இந்திய அளவில் படர்ந்தது. டாக்டர் எஸ்.எஸ்.பிள்ளையின் புகழோ உலகளவில் விரிந்து பரந்தது.
- தமது 35வது வயதிலேயே ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று நம் நாட்டை கணித மேதை இராமானுஜத்திற்கு பின் உலகிற்கே அடையாளம் காட்டியவர் டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை என அழைக்கப்பெற்ற டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை அவர்கள்.
- அவர் 1901 ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று கணிதவுலகம் சிறக்க வல்லம் என்ற கிராமத்தில் தோன்றினார். தொடக்கக் கல்வி இலத்தூரில் கழிந்தது. இவ்வேளையில் தந்தை இறந்ததால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது. அப்போது சாஸ்திரியார் என்னும் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தாம் இவரை தொடர்ந்து படிக்கம்படி தூண்டியதோடல்லாமல் தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை இவரின் கல்விக்காக செலவழித்து வந்தார்.
- அந்த ஆசிரியரின் கனவு வீண்போகவில்லை. தொடர்ந்து செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து இறுதியாண்டில் தேர்வில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்த பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பிஏ வகுப்பி்ல் சேர்ந்தார்.
- அதன்பின் பிள்ளையவர்கள் சென்னை பல்கலை கழகத்தில் கணிதத்துறையில் ஆராய்ச்சி மாணவராக சேர விரும்பினார். அன்றைய சட்டப்படி ஒருவர் ஆராய்ச்சி மாணவராக சேருவதற்கு பிஏ ஆனர்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரோ பிஏ.வில் இரண்டாம் வகுப்பே பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழக விதிகளின்படி இவர் ஆராய்ச்சி மாணவராக சேர இயலாத சூழல். இந்த வேளையில்தான் எதிர்பாராத இடத்திலிருந்து இவருக்கு ஒர் உதவி கிடைத்தது.
- அன்று பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் திரு. சின்னதம்பிப்பிள்ளை. பிள்ளையவர்களின் திறமையை உணர்ந்த இவர் பல்கலைக் கழக ஆட்சிகுழுவில் பிள்ளையவர்களுக்காக வாதாடினார்.
- நம் சென்னை பல்கலைக் கழகம் கணிதமேதை சினிவாஜ ராமனுஜர் விஷயத்தில் அவமானப்பட்டது போதும். மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள். சாதாரண மாணவர்களுக்கென உருவாகியுள்ள விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்காதீர்கள் என வாதிட்டார்.
- அவர் கருத்தினை ஏற்ற பல்கலை கழக ஆட்சி குழு எஸ்எஸ் பிள்ளைக்கென அவ்விதிகளை தளர்த்திய பின் உரிய அனுமதியை வழங்கியது. பின் சென்னை பல்கலை கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்து 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்எஸ்சி பட்டம் பெற்றார்.
- எஸ்.எஸ். பிள்ளையவர்கள் முதன் முதலாக தம் ஆராய்ச்சியினை பேராசிரியர் அனந்தராவ் என்பவரின் கீழ்தான் தொடங்கினார். பின் 1929ம் வருடம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிய தொடங்கினார். இவ்வேளையிலதான் எண்கணித ஆராய்ச்சியில் (Number Theory) ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
- இந்தியாவிலேயே முதன்முதலாக கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. இருப்பினும் உலக அளவில் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது Theory of numbers எனும் இவரது எண் கணித ஆராய்ச்சிதான். இந்த எண் கணித கோட்பாட்டை 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த டயாப்பேன்டைன் (Dephantine) எனும் கணித மேதைதான் முதன் முதலில் ஆராய தொடங்கினார். பின் பல நூற்றாண்டுகளாக இக்கோட்பாடு படிப்படியாக விளக்கம் பெற்று வந்தது.
- கிபி 1640-ல் பார்மேட் (FERMAT) எனும் கணித மேதை இக்கோட்பாடு சம்பந்தமாக ஒரு கணித புதிரை (Problem)உருவாக்கி அதற்கு விடை காணாமலேயே மறைந்து விடுகிறார். அதன்பின் (Lagrange) லாகிரேஞ்சு எனும் பிரெஞ்சு கணித மேதை இது சம்பந்தமாக ஒரு நிரூபணத்தைக் காண்கிறார்.
- அவருக்குபின் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் வாரிங்ஸ் என்பவர் (Pro. Warings) இது சம்பந்தமாக ஒரு புதிரையும் வழங்கி அதற்குரிய விடையையும் காண்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவருக்கு விடை தெரிகிறது. ஆனால் அதை அடைவதற்கு உரிய வழி தெரியவில்லை.
- அவர் தொடங்கி வைத்ததுதான் புகழ்பெற்ற Waring's Problem. இப்புதிருக்கு விடை காண 300 ஆண்டுகளாக இம்மேதைகளெல்லாம் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆராய்ச்சி செய்தும் வெற்றி பெறமுடியாமல் போயிற்று.
- தம் 20வது வயதில் டாக்டர் பட்டம் பெற்று கணிதத்தில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய ஹங்கேரி நாட்டுக் கணித மேதை டாக்டர் பால் எர்டாஸ் (Dr. paul Erdos) என்பவரால் கூட Waring's Problem-திற்கு தீர்வு காண முடியாது போயிற்று.
- தொடர்ந்து 1858ல் பேராசிரியர் லியோவில்லி (Liourville) இவ்வாராய்ச்சில் ஒருபடி முன்னேறினார்.
- 1909-ல் ஜெர்மன் மேதை டாக்டர் வெய்ப்பிரிச் (Weifrich) இப்புதிரை விடுவி்க்க ஒரு வழிமுறையை கண்டறிந்தார். இதை தொடர்ந்து ஜெர்மன் மேதை பேராசிரியர் லியாண்டர்(Leander) மேலும் ஒருபடி முன்னேறினார். \
- இதன்பின் இங்கிலாந்து கணித மேதைகளாகிய பேராசிரியர் ஹார்டியும் (Hardy) பேராசிரியர் லிட்டில்வுட்டும் (Littlewood) கூட்டாக சேர்ந்து மேலும் சில உண்மைகளை கண்டிபிடித்தனர்.
- அதன்பின் அமெரிக்க மேதை டாக்டர் டிக்சன் (Dickson) மேலும் முன்னேறினார். தொடர்ந்து 1933ல் பேராசிரியர் ஜெம்ஸ் (james) மேலும் ஒரு படி கடந்தார்.
- 1935ல் ரஷ்ய மேதை பேராசிரியர் வினோகிரடோவ் (Vinogradov) புதிய நிரூபணமொன்று வழங்கினார்.
- இவ்வாறு இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த கணித மேதைகள் எல்லோரும் சேர்ந்து பலகாலம் முயற்சித்தும் ஒருவராலும் முழுமையாக விடை காண முடியாமல் அனைவரையும் திணறடித்து வந்தது இந்த Waring's Problem. இந்த வேளையில்தான் டாக்டர் எஸ்எஸ்பிள்ளை அவர்கள் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாக உழைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கிய 5வது வருடத்தில் Waring's Problems - த்திற்குரிய வழியையும், அதன் விடைகளையும் காண்பதில் பெருமுன்னேற்றம் அடைந்தார்.
- 10-02-1936-ல் உலக கணித மேதைகள் வியப்பால் மூச்சுவிட மறந்து போய் நின்ற நாள்.
- இந்திய நாடு கணித உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்ற நாள். டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை Waring's Problem த்திற்கு விடை கண்டுபிடித்து தாம் சீனிவாச ராமனுஜத்தின் வாரிசுதான் என்பதை உறுதி செய்த நாள்.
- மேலும் அவர் தான் கண்டுபிடிப்பை உறுதி செய்து ஒரு நூலையும் வெளியிட்டார். இதை தொடர்ந்து Dr.pilai's Theory of Numbers எனும் ஒரு கோட்பாடு கணிதவியலில் நிரந்தரமான ஓரிடத்தை பெற்றது.
- இம்மாபெரும் சாதனையை முடித்தவுடனேயே கடந்த 400 ஆண்டுகளாக கணித மேதைகளை மிரட்டிக் கொண்டிருந்த " Fourier Series" எனும் மற்றுமொரு கடினமான புதிரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயர்மட்ட அளவில் அப்புதிரை விடுவித்த பெருமை இவருக்கு உண்டு.
- இதை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியராகிய டாக்டர் ஐன்ஸ்டீனும் ( Einstein) டாக்டர் ஓபன்ஹைமரும் (Oppenheimer) தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் இவரோ இந்தியாவை விட்டு வெளியேங்கும் செல்ல விரும்பவில்லை.
- எனவே அவர்களழைத்த போதும் 'India is enough for my research' என பணிவுடன் கூறி உலகையே வியக்க வைத்தார். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் பின்னாளில் சான்பிரான்சிகோவில் நடைபெறவிருந்த உலக கணித மாநாட்டிற்கு தலைமை ஏற்கவும், அதன்பின் பிரிஸ்டன் பல்கலை கழகத்தில் டாக்டர் ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை அவர்கள் 1950 வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டார்.
- புறப்படுவதற்கு முன்பு தன் நண்பர்களிடம் ஒரு நோட்டு புத்தகத்தை உயர்த்தி காட்டி "இதில் அடங்கியுள்ள ஆராய்ச்சியினை நான் பிரிஸ்டனில் சென்று வெளியிடுவேன். இதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் புகழ் கிடைக்கும்" என்றார்.
- கவனியுங்கள், இதன்மூலம் தனக்கு பெரும் புகழ் கிடைக்கும் என அவர் கூறவில்லை. இந்தியாவிற்கு கிடைக்கும் என்றுதான் கூறினார்.
- "பணியுமாம் என்றும் பெருமை" என வள்ளுவர் எழுதியதே இவருக்காகதானோ.
- 'Star of mary land' எனும் விமானத்தில் எதிர்காலம் பற்றிய பெருங்கனவோடு அவர் புறப்பட்டார். விதி சிரித்தது. கெய்ரோவில் விமானம் இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர் மீண்டும் புறப்பட்டது.
- ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை 3 மணி, விமானம் சகாரா பாலைவனத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக விபத்துகள்ளாகி எரிந்து விழுந்து சாம்பலானது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்புதான் டாக்டர் பிள்ளையவர்கள் ராமானுஜம் இன்ஸ்டிட்டியூலும், சில ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருந்தார்.
- டாக்டர் பிள்ளை புறப்படவிருந்த முதல் பயணத்தை சில காரியங்களை முன்னிட்டு அவரே ரத்து செய்தார்.
- இரண்டாவது பயணததை விமான கம்பெனி ரத்து செய்தது.
- மூன்றாவது பயணம் - அதன் முடிவு இவ்வாறாகியது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இதுதான் போலும்.
- சான்பிரான்ஸ்கோ மாநாட்டில் பங்கு கொண்ட கணித மேதைகள் டாக்டர் பிள்ளைக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். டாக்டர் பிள்ளையின் உருவ படத்தை திறந்து வைத்து திருப்திப்பட்டனர்.
- இடி பெல் எனும் கணித மேதை உலகிலுள்ள சிறந்த கணித மேதைகளை பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். Men and Mathematics என்பது அந்த நூலின் பெயர். இதில் இந்தியாவை பற்றி எழுதும் போது சீனிவாச ராமானுஜம், டாக்டர் எஸ்எஸ் பிள்ளை என இவ்விருவரை பற்றி மட்டுமே எழுதியுள்ளார்.
- 10ம் வகுப்பு கணித நூலில் தேர்வுக்காக அன்று என்னும் தலைப்பில் இந்தியா சந்தித்த மிகச் சிறந்த கணித மேதைகளி்ன் பரம்பரையை பற்றி கூறுமிடத்தில் ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கர், சீனிவாசராமானுஜம், டாக்டர் எஸ்எஸ்பிள்ளை என எழுதப்பட்டுள்ளது.
- டாக்டர் எஸ்எஸ்பிள்ளை உலக புகழ் பெற்ற ஒரு கணித மேதை மட்டுமல்ல, மனித குலத்தை ஓட்டு மொத்தமாக நேசித்த மனித நேயம் மிக்க பண்பாளரும் கூட...
Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0830-ss-pillai-man-of-numbers.html