ஏப்ரல் 21 தேசிய குடிமை பணிகள் தினம்
ஜனநாயக நாட்டின் அடித்தளமாகக் கூறப்படுவது நாடாளுமன்றம், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத் துறையாகும். இவ்வாறு நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அரசு நிர்வாகத் துறையின் உயரதிகாரிகள் இந்திய சிவில் சர்வீஸஸ் எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தற்போது இந்தியக் குடிமைப் பணிகள் மூன்று முக்கியமான சேவைகளை அளிக்கும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை தேர்வு செய்கிறது.
நாடு முழுவதும் 4,802 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 3,798 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 2,668 ஐ.எப்.எஸ். அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான இந்த அதிகாரிகளை கவுரவிக்கும் வகையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. தனி நபர், குழு மற்றும் அமைப்பு என்ற அடிப்படையில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
தனிநபர் பிரிவில் விருது, சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது.
குழு பிரிவில் ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.
இதில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அளிக்கப்படுகிறது.
அமைப்பு பிரிவுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நமக்காக மிகச் சிறந்த சேவையாற்றி வரும் இந்த அதிகாரிகளை பாராட்டுவோம்.
நேர்மை = பணியிடமாற்றம்:
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குடிமைப் பணிகளை அளிக்கும் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சேவை செய்தாலும், சிலர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருப்பார்கள்.
அனைத்து அதிகாரிகளும் சிறந்த சேவை செய்தவர்கள்தான்.
ஆனால் அதில் குறிப்பிட்ட சிலர் மற்ற அதிகாரிகளிடமிருந்து வித்தியாசமான செயல்பாட்டால் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நேர்மையாக நடந்து கொள்வது, லஞ்சம் வாங்கக் கூடாது என்று செயல்பட்டு அதனால் பலமுறை பணியிடமாற்றங்களை கண்ட அதிகாரிகளும் உள்ளனர்.
அதே நேரத்தில் மக்களின் அபிமானத்தை இவர்கள் பெற்றுள்ளனர்.
சமீபத்திய உதாரணங்களாக அசோக் கெம்கா, துர்கா சக்தி நாக்பால், தமிழகத்தில் சகாயம் போன்ற அதிகாரிகளை கூறலாம்.
எந்தவிதப் பிரச்னைகள் வந்தாலும் தங்களுடைய கொள்கையில் இருந்து பின்வாங்காத இதுபோன்ற அதிகாரிகள்தான், இந்தப் பணிக்கு வருவதற்கு இளைஞர்களை ஈர்க்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதுடன், அதை செயல்படுத்தும் இந்த அதிகாரிகளின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது.
இந்திய குடிமைப் பணிகள் தினத்தில், மக்களுக்கான தங்களுடைய சேவையை மீண்டும் உறுதிபடுத்துக் கொள்கின்றனர். மேலும் எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை வகுக்கவும் உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.