தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் - நூலகம் பற்றிய செய்திகள் TNPSC :
தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்
செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ப்பல்கலைக்கழகம். இது தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது "தமிழ்நாடு" எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம்.
இங்குக் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் ஆகிய ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம் தமிழ்மொழி ஆய்வுகள் செய்வது மட்டுமன்றி, சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குக் கல்வி கற்று வருகின்றனர்.