தெரியுமா உங்களுக்கு? Do You know?
தெரியுமா உங்களுக்கு?

"உலகில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் சிலவற்றை பார்க்கலாம் வாங்க!"
உலகின் மகிழ்ச்சியான நாடு என்றதும் பலருக்கு சட்டென்று நினைவிற்கு வருவது 'பின்லாந்து'. தொடர்ந்து பல ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்து வருகிறது. அதுபோல, உலகின் மகிழ்ச்சி குறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துவரும் நாடு, நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தான்.

தீயில் சர்க்கரை உடனடியாக எரிந்து விடுவதில்லை. சூடுபடுத்தும் போது முதலில் உருகி அதன் அமைப்பு சிதைந்து பழுப்பு நிறமாக மாறுகிறது. மேலும் அதிகமாக சூடுபடுத்திய பின்னரே எரிந்து கருப்பு நிற கார்பனை வெளியிடுகிறது.
இளநீரில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த தேர்வாக இளநீர் உள்ளது. இருப்பினும் ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 500 மி.லி வரை பருகுவது மட்டுமே பாதுகாப்பானது.

மன அழுத்தத்தை குறைத்து உடனடியாக புத்துணர்ச்சியை தருவதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பயணத்தின் பொழுது சிலர் வாந்தி எடுக்காமல் இருக்க எலுமிச்சையை நுகருவதை போல மனநிலை மாற்றத்திற்கும் இதை நுகரலாம்.
மந்தமாகவோ அல்லது கவனம் சிதறுவதாகவோ உணரும் சமயத்தில் சிறு உடற்பயிற்சிகள் குறைத்தது 2 நிமிடங்கள் செய்ய மூளையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வேகமாக செயல்பட தூண்டிவிடும்.

மனிதர்கள் உட்பட பெரும்பாலா விலங்குகளுக்கு சிவப்பு ரத்த அணுக்கள் வட்ட வடிவம் கொண்டிருக்கும். ஆனால் கடுமையான பாலைவன சூழல்களில் ஏற்படும் நீரிழப்பை தாங்கி உயிர் வாழ்வதற்கு ஏதுவாக ஒட்டகங்களுக்கு நீள் வட்ட வடிவத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கிறதாம்!
இயற்கையாகவே மென்மையாக இருக்கும் காளான்களில் 85% முதல் 95% வரை நீர் நிரம்பப்பெற்றவை. மேலும், செல்லுலோஸ் போன்ற கடினமான தாவர இலைகளுக்கு பதிலாக "கைட்டின்" எனும் பஞ்சு போன்ற தன்மையை கொண்டிருப்பதும் இதற்கு காரணமாம்.

உலகளவில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் யுரேனிய வளங்களில் ஏறத்தாழ 28% (சுமார் 1.72 மில்லியன் டன்கள்) கொண்டிருக்கும் நாடு ஆஸ்திரேலியா. இருப்பினும் அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் இல்லை. மேலும் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் அமைதியான அணு பயன்பாட்டையும் அந்நாடு ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது.