இந்திய தேசியச் சின்னங்கள்- தேசியக் கொடி / National Symbols of India - National Flag
1.தேசியக் கொடி
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசியக் கொடி இருக்கிறது. இந்தியாவின் தேசியக் கொடி மூவர்ணம் கொண்ட கொடியாகும்.இதனை மூவர்ணக்கொடி என்றும் அழைக்கிறார்கள்.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மூவர்ணம் கொண்ட தேசியக் கொடி உருவாகிவிட்டது.தேசியக் கொடியை நாட்டு குடிமக்கள் உயிர் மூச்சாகக் கருதுகின்றனர். திருப்பூர் குமரன் கொடியை காக்க தனது உயிரையே தியாகம் செய்தார்.இந்திய தேசியக் கொடிக்கு என்று ஒரு வரலாறு உண்டு.
வரலாறு:
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது சுதந்திர உணர்வையும் ,ஒற்றுமையையும் மக்களிடம் உருவாக்க ஒரு கொடி தேவைப்பட்டது.1904 ஆம் ஆண்டில் நிவேதிதா என்பவர் முதன்முதலாக ஒரு கொடியை உருவாக்கினார் .சிவப்பு வண்ணத்தில் சதுர வடிவத்துடன்,மஞ்சள் நிற உள் வடிவத்தையும் ,நடுவில் வெள்ளைத்தாமரையையும் கொண்டிருந்தது.இதில் வந்தே மாதரம் என்ற வார்த்தை வங்க மொழியில் இடம் பெற்றிருந்தது.சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தையும், மஞ்சள் வெற்றியையும்,வெள்ளை நிறம் தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் நோக்கத்துடன் கொடி உருவாக்கப்பட்டது.
முதன்முதலாக மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடி 7,ஆகஸ்ட் 1906 ஆம் ஆண்டில் கொல்கத்தாவின் கிரீன் பார்க்கில் ஏற்றப்பட்டது.அந்தக் கொடி நீள் வடிவில் ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை என மூன்று பாகங்கள் கூடியதாக இருந்தது.இக்கொடி சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் ஏற்றப்பட்டது.இக்கொடியின் நடுப்பாகத்தில் தேவநாகரி எழுத்துருவில் வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது .மேடம் பைக்கஜி காமா என்பவர் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 அன்று பாரிஸில் ஏற்றினார் .இதுவும் முதல் கொடியைப்போலவே மூவர்ணக் கொடியாகவே இருந்தது.
இக்கொடியில் பச்சை,இளம் சிவப்பு,சிவப்பு என மூன்று பாகங்கள் இடம்பெற்றிருந்தன.பச்சை இஸ்லாமியத்தையும்,இளம் சிவப்பு இந்துவத்தையும், சிவப்பு புத்த மதத்தையும் குறிக்கும் நோக்கில் உருவாக்கபட்டிருந்தது.மேலும் இக்கொடியில் தாமரையும், ஏழு நட்சத்திரங்களும்,நடுப்பாகத்தில் வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.இந்தக் கொடி பெர்லினில் நடந்த சோசலிச மாநாட்டின்போது காட்சிக்கு வைக்கப்பட்டது.
பாலகங்காதர திலகர் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை வச கோடுகளும் இடம் பெற்றிருந்தன.இதில் ஏழு நட்சத்திரங்களும்,இடது மூலையில் இங்கிலாந்தின் யூனியன் ஜாக்கும் , வெள்ளை நிறத்தில் பிறை நிலாவும், நட்சத்திரமும் கொண்ட கொடியை உருவாக்கினர். இக்கொடியை 1917 ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தின்போது ஏற்றினார்கள்.
பிங்காலி வெங்கய்யா :
விஜயவாடாவில் 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது.அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கய்யா (Pingali Venkaiyya) என்ற இளைஞர் இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு கொடியை வடிவமைத்து மகாத்மா காந்தியிடம் வழங்கினார்.இவர் ஆந்திராவின் மசிலிபட்டி என்னும் ஊரில் (2,ஆகஸ்ட்,1876 – 4,ஜூலை,1963) பிறந்தார்.இவர் நிலவியல் பட்டம் பெற்று வைரச்சுரங்கத்தில் வேலைபார்த்தார்.தென்னாப்பிரிக்காவில் நடந்த போரில் இந்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்து பணிபுரிந்தார்.அப்போது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
இவர் உருவாக்கிய கொடியில் இந்து,முஸ்லீம்களை குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி அதில் வெள்ளை நிறத்தை சேர்க்குமாறு கூறினார்.அதனுடன் ஒரு சுழலும் சக்கரத்தை வைக்குமாறு ஆலோசனை கூறினார்.இக்கொடியில் இடம் பெற்றிருந்த நிறமானது வெவ்வேறு மதங்களைக் குறிக்குமாறு அமைந்திருந்தன.இதில் இடம் பெற்றிருந்த சக்கரம் எல்லா வண்ணங்களிலும் இடம் பெற்றிருந்தன.
கராச்சியில் 1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் குழு கூடியது.பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த காவி,வெள்ளை,பச்சை வண்ணங்களுடன் நடுவில் சக்கரத்தைக் கொண்ட கொடியை குழு ஏற்றது.இக்கொடியில் காந்தியின் இராட்டைச் சக்கரம் இடம் பெற்றிருந்தது.இக்கொடியை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தினர்.
தேசியக் கொடி அங்கீகாரம் :
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நம் நாட்டின் தேசியக் கொடியை தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது . ராஜேந்திர பிரசாத் அவர்களின் தலைமையில் பி.ஆர்.அம்பேத்கார்,அபுல் கலாம் ஆசாத்,சரோஜினி நாயுடு ,கே.எம்.பணிக்கர்,சி.ராஜகோபாலச்சாரி ,கே.எம்.முன்ஷி ஆகியோர் கொண்ட குழு கொடி சம்பந்தமாக பரிசீலனை செய்து 14,ஜூலை,1947 இல் முடிவுக்கு வந்தது.அதில் மத அடையாளத்தை மாற்றி,தேசியக் கொடிக்கான புதிய கருத்து உருவாக்கப்பட்டது. கொடியில் எந்தவித மதசாயலும் இருக்கக் கூடாது.சக்கரத்திற்குப் பதிலாக சாரநாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது.
தீர்மானம்:
இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஜவகர்லால் நேரு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார் .தேசியக் கொடி செவ்வகமாகவும்,அதன் நீள அகலம் 3:2 என்னும் விகிதத்திலும்,கொடியில் மூன்று வர்ணங்களில் காவி மேல்புறத்திலும் , பச்சை கீழ் புறத்திலும்,இவற்றிற்கு இடையே வெள்ளை நிறமும்,அதில் நீல நிறத்தில் தர்ம சக்கரம் அமையும்படியாக இருக்கும். 1947,ஜூலை 22 இல் நடந்த அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.இக்கொடி முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 இல் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது.
தேசியக் கொடியானது கரும்காவி,கரும்பச்சை,மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களைக் கொண்டது,மூன்று வர்ணப் பகுதிகளும் அளவில் சமமானவை.வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 ஆரங்களை உடைய அசோகச் சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறமானது தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும் ,பச்சை நிறம் நம்பிக்கை,பசுமை,விவசாய செழிப்பு போன்றவற்றை குறிப்பதாக கற்பிக்கப்படுகிறது. நடுவில் இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம் வாழ்க்கைச் சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கொடியைக் கையாளும் விதிமுறைகள்:
கொடி தயாரிப்பிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு.சர்வதேச அளவு முறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறை 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் கொடியின் நீள,அகலம்,நிறங்களின் அளவு,அடர்த்தி,பளபளப்பு,துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத் தன்மையையும் பற்றியும் விவரிக்கின்றது.கொடித்தயாரிப்பில் விகிதாசாரங்கள் மீறுவது மிகப் பெரிய குற்றமாகும்.கொடித்துணியானது காதி என்கின்ற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்க வேண்டும்.பருத்தி,பட்டு மற்றும் கம்பளி இவற்றில் ஒன்றால் கையினால் நெய்யப்பட்ட கைத்தறித் துணியாகத்தான் இருக்க வேண்டும்.
தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம் (FlagCode Of India) 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது.பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை அணியும் உடை,பயன்படுத்தும் கைத்துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண்,தரை,தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. கொடி கிழிந்த நிலையிலோ.நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது.
சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.அதே போல சூரிய அஸ்தமனத்திற்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும்.தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும்.தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு,அவமரியாதை ஏற்படாத வகையில் கையாள வேண்டும்,ஏற்ற வேண்டும்.
தேசியக் கொடியை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது.இதற்குப் பின்னர் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் இந்தியக் குடிமக்களுக்கு தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிடலாம் என்கின்ற உரிமையும் கிடைத்துள்ளது.