பிரதோஷம்!
"இந்த நாளில் ஈசனை வழிபட உங்களைப் பிடித்த அனைத்து தோஷங்களும் நீங்கும்."
எனினும், 'சந்தோஷம்' மட்டும் உங்களுக்கு எப்போதும் நிலைத்திருக்கும். மாணிக்கவாசகர் எழுதிய திருவெம்பாவை பாடல் ஒன்றே மேற்படி சொல்லப்பட்ட கருத்திற்குச் சான்று. அப்பாடல் வருமாறு.
"பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் 'போதார் புனைமுடியும்' எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன் கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்."
மேற்படி பாடலில் "போதார் புனை முடியும்" என்ற வரிக்கு "மலர்களை அணிந்தவன்" என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா?
"உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்குப் பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி!" என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன். அதனால் தான் இறை-அவன் எனப்படும் 'இறைவன் அவன்'. மேற்கண்ட பாடலின் முழு விளக்கம் வருமாறு.
தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது.
சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன்.
ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!
எனினும், ஒன்று மட்டும் நிச்சயம் ஈசன் அவன் பூரணம் ஆனவன். அதாவது முழுமை அடைந்தவன். வட மொழியில் 'ஈஸா வாஸ்ய உபநிஷதம்' என்னும் நூலில் இருந்து கீழ்கண்ட ஒரு சுலோகம் வரும்.
"ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி: II"
இதன் பொருள்: "அதுவும் பூரணம், இதுவும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின் பூரணமே எஞ்சி உள்ளது. இவ்வாறு ப்ரம்மம் (அல்லது ஈசன் என்னும் பரப்பிரம்மம் அல்லது சதாசிவன்) மாறுபடாதவராக உள்ளார். முழுமைத் தன்மையில் இருந்து அவர் குறைவுபடுவதில்லை. எனவே, முரண்பாடு வேண்டாம். உடல், மனம், ஆத்மா மூன்றிலும் அமைதி நிலவட்டும்."
மேற்படி பாடலின் உவமை விளக்கம்: ஒரு தீபத்தின் ஒளியை ஐக் கொண்டு இன்னொரு தீபத்தை ஏற்றினாலும் முதல் தீபத்தின் ஒளி குறைவதில்லை. அது தொடர்ந்து பல தீபங்கள் ஒளி தர உதவும். அதுவே இறை ஞானம். பிரபஞ்ச சக்தி. சர்வேஸ்வரன் எனப்படுகிறார். அந்த ஈசனை இந்தப் பிரதோஷ தினத்தில் வழிபட்டு 'பிறவா வரம் பெறுவோம்'.