கிராம பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கிராம பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி?....
அதை தடுக்க என்ன செய்யலாம்?..... 
இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் வேலைகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது.
ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்*.
*ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம்.
 ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம்....
உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை. சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போட்டி போட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பு ஊதியம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 தமிழக அரசால் வழங்கப்படும். மேலும் கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ. 200 அமர்வு படி என்ற பெயரில் வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால் ஒரு மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம் சரியாக 1200 ரூபாய் தான். இதே போல கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்திற்கு ரூ. 50 அமர்வு படியாக வழங்கப்படும்.
இவர்கள் அதிகபட்சமாக மாதம் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார்கள். பிறகு ஏன் இத்தனை போட்டி?
 ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரங்கள்.......
கிராம ஊராட்சியை பொறுத்தவரையில் காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் முழு அதிகாரம் ஊராட்சி மன்றத்தலைவருக்கு மட்டுமே உண்டு. அதே போல குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நான்கு சிறப்பு நாட்களில் கட்டாய கிராம சபைக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.
அந்தக்கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களின் ஊராட்சியின் வரவு மற்றும் செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். கிராம மக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கேட்கும் கேள்விக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதிலளிக்க வேண்டும். அப்போது புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் அரசின் புதிய திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் போது ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்தலைவருக்கு உண்டு.
 கோடிகள் புரளும் ஊராட்சிகள்
கிராம ஊராட்சியைப்பொறுத்த வரையில் அதற்கான வருவாய் சில வரிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் நிதி திட்டங்கள் மூலமாக கிடைக்கிறது.
குறிப்பாக 14 ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழக கிராம ஊராட்சிகளுக்கு சுமார் 7,899 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2019 முதல் 2020 ஆண்டிற்கு மட்டும் அதிகபட்சமாக 2,369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 சதவீத நிதியை தனது வருவாய் மூலமாக தமிழக அரசு ஆண்டு தோறும் வழங்கிவருகிறது.
இவ்வளவு பணம் புரளும் களமாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளதை அனைவரும் இங்கே கவனிக்க வேண்டும்.
 பஞ்சாயத்து தலைவர்களின் ஊழல் டெக்னிக்ஸ்....
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், TVS 50 வைத்திருப்பவர்கள் பஞ்சாயத்து தலைவர் ஆன பின்னர் Toyato காரில் செல்கிறார்கள், கண்ணாடி வைத்த மிகப்பெரிய மாடி வீடு கட்டுகிறார்கள் இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது ஊழல் எவ்வாறு நடக்கிறது அதை எப்படி தடுப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
1. பல ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதை பயன்படுத்தி ஐந்து முதல் ஆறு பேரை மட்டும் வைத்து கூட்டத்தை நடத்தி வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி கூட்டத்தை முடித்துவிடுகிறார்கள்.
இதனால் கசோலை மூலம் பஞ்சாயத்து தலைவர்கள் அடிக்கும் களவாணி தனத்தை கண்டுபிடிக்க முடியாமலே போகிறது. ஆகவே கிராம சபைக்கூட்டத்தில் முடிந்தவரை பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று ஊராட்சி தலைவரிடம் கணக்கு கேட்க வேண்டும்.
2. கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க பஞ்சாயத்து தலைவர்கள் பல குறுக்கு வழிகளை கையாளுவார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை பொதுமக்களுக்கு கூறாமல் இருப்பது போன்றவை. ஆகவே கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை அனைவருக்கும் சொல்லி பொதுமக்களை கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
3. இன்னும் சில கிராம ஊராட்சிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் எழுத படிக்க தெரியாத முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு விவரம் ஏதும் சொல்லாமல் தலைக்கு 20 ரூபாய் என பிச்சை காசுக்களை கொடுத்து கிராம சபைக்கூட்டத்திற்கான பொதுமக்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி அருமையாக கணக்கை முடித்துவிடுவார்கள்.
4. சாதியின் பெயரால் சிலரை ஒதுக்கி வைப்பது இன்றளவும் தமிழக கிராமங்களில் சாதாரண ஒன்று தான். ஆனால் கிராம சபைக்கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பது சில ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பிடிப்பது இல்லை. தனது ஊழலை குத்தாட்டத்தை மறைக்க சிலர் சாதியை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சாதியால் சதி செய்தாலும் கிராம சபை கூட்டத்தை யாரும் தவற விடக்கூடாது.
5. 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளி என்ற பெயரில், வேலையே பார்க்காதவர்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும், சாதிக்காரர்களுக்கும் அடையாள அட்டையை கொடுத்து வேலை செய்ததாக கூறி கணக்கு கொடுத்து காசும் பெற்றுக்கொள்வார்கள்.
6. மத்திய, மாநில அரசுகளின் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான சில திட்டங்களில் (வீடு கட்டும் திட்டம், கழிவறை வசதி போன்ற இலவச திட்டங்கள்) பயனாளிகளாக தனது சொந்தக்காரர்களை மட்டும் தேர்வு செய்வதும், சொந்தக்காரர்கள் அல்லாதவர்களிடம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை லஞ்சம் வாங்குவதும் என பல திள்ளுமுள்ளு வேலைகள் நடக்கிறது.
7. இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் படித்த இளைஞர்கள் முதலில் கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். கட்சிப்பாகுபாடின்றி கேள்விகளை கேட்கவும் முன்வர வேண்டும்.
8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தமிழ்நாட்டின் எந்த மூலையில் உள்ள கிராமத்தின் வரவு - செலவு விவரங்களை வேண்டுமானாலும் பெற முடியும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலரை அணுகி ஊராட்சியில் நடக்கும் திட்டங்களுக்கான நிதி செலவுகள் போன்ற விவரங்களை கேட்டுப்பெறலாம். மேலும் திட்டங்களுக்கான பொருட்செலவுகளின் ரசீது விவரங்களையும் கேட்டுப்பெறலாம் என்பதை அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் தமிழக மக்களே!
அரசியல் சேவைக்கானது என்பது மாறி வணிகமானது தான் இங்கே பிரச்சனை!
மறக்காமல் ஒரு ஷேர் செஞ்சிட்டுபோங்க...
நன்றி...