ஆலங்கட்டி மழை ( hail )
ஆலங்கட்டி மழை ( hail ) வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும் . பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம். இவை 5 மற்றும் 200 மில்லி மீட்டர்கள் (0.20 மற்றும் 7.87 அங்குலம்) விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) 5 மிமீ (0.20 அங்குலம்) க்கும் மேலுள்ளவை
GR என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் GS என்றும் குறிப்பிடப்படுகின்றன.
பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது.
இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.
வானத்திலிருந்து பனி மழை பெய்வதற்கு "சூடோமோனாஸ் சிரஞ்சி" என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும் என சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
வானிலை செயற்கைக் கோள்களின் மூலமும் வானிலை ரேடார் ஒளிப்படங்களிலிருந்தும் ஆலங்கட்டி மழை வாய்ப்புள்ள மேகங்களை கண்டறியலாம். அளவில் பெரிதான ஆலங்கட்டிகள் மிக விரைவாக கீழே விழுகின்றன. இவற்றின் விரைவு உருகும் தன்மை, காற்றுடன் உரசல், மழையுடனான மற்றும் பிற ஆலங்கட்டிகளுடனான தாக்கம் ஆகியனவற்றால் குறைக்கப்படுகிறது.
மனிதர்களுக்கும் சொத்துக்களுக்கும், குறிப்பாக பயிர்வகைகளுக்கு, சேதம் விளைவிக்கின்ற அளவிலான ஆலங்கட்டி மழைக்கான முன்னறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.