Search This Blog

நோபல் பரிசை வென்ற முதல் தமிழர்

நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் அறிவியல் விஞ்ஞானி சர். சி.வி.ராமன் பிறந்த தினம் நவம்பர்-07-1888.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி சர். சி.வி.ராமன் பிறந்தார்.

இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சிவி ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதான போது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும் தங்கப் பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சிவி ராமனின் அறிவியல் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது.

18 வயதான போது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் இதழில் வெளியானது. அப்போது தான் சி.வி.ராமனை உலகம் கவனிக்கத் தொடங்கியது.

ஒளி, ஒலி காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிய காலத்திற்கு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது. அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.

1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கிப் பாராட்டியது. சர். சிவி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.

சூரிய ஒளி தண்ணீரிலும் ஐஸ் கட்டியிலும் மற்றப் பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி எவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும் போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் ராமன் கோடுகள் என்றும் அந்த விளைவு ராமன் விளைவு என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது.

அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி. அந்த கண்டுபிடிப்புக்காக சர். சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு இதனைக் கொண்டாடி வருகிறது.

சர். சி.வி. ராமனுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் கௌரவங்கள் ஒரு பார்வை:-

லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் நைட் ஹீட் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1929 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.

இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான மேட்யூச்சி பதக்கம் வழங்கப்பட்டது.

மைசூர் அரசர், ராஜ்சபாபூசன் பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் அகில உலக லெனின் பரிசு அளிக்கப்பட்டது.

சர் சிவி ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி 82 ஆம் அகவையில் காலமானார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url