Search This Blog

வரலாறு பேசும் கல்வெட்டு இராயப்பனூர் கிராமம்:

கிருஷ்ணதேவராயரின் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராயப்பனூர் என்ற ஊரில் சமய ஒற்றுமையை போற்றும் கிருஷ்ணதேவராயரின் 2 கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,டாக்டர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன்,கவிஞர் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு ராயப்பனூர் பகுதியில் வரலாற்று ஆய்வை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிவன்கோயில் அருகே ஒரு கல்வெட்டும்,அங்காளம்மன் கோயில் அருகே மற்றொரு கல்வெட்டும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அவை இரண்டும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டாகும்.அங்குள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு தானம் செய்ததை ஒரே கல்வெட்டில் பொறித்துள்ளார்கள். இதன் மூலம் சைவம் மற்றும் வைணவம் என இரு மதங்களையும் மன்னர் ஆதரித்தது தெரிய வருகிறது.

இப்போது ராயப்பனூர் என அழைக்கப்படும் ஊரை ராயப்ப நல்லூர் எனவும், கைலாசநாதர் கோயிலை உய்யகொண்ட சோளீசுரமுடையார் கோயில் எனவும் ,கலியபெருமாள் கோயிலை சங்கு வலந்தரித்த பெருமாள் கோயில் எனவும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டு கல்வெட்டுக்களின் கீழ்பகுதி மண்ணுக்குள் புதைந்திருப்பதால் முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

முதல் கல்வெட்டு அங்காளம்மன் கோயில் அருகே நடப்பட்டுள்ள பலகை கல்லின் இரண்டுபுறமும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.முன்புறம் 19 வரிகளும் பின்புறம் 16 வரிகளும் காணப்படுகின்றன.ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு செய்திகளை சொல்லுகின்றன. முதல்பக்கம் கி.பி 1521 ஆம் ஆண்டு சித்திரபானு வருடம் மாசி மாதம் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. திம்மைய நாயக்கர் என்பவர் இந்தப்பகுதியின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
கிருஷ்ணதேவராயரின் தர்மமாக ராயப்பநல்லூரில் உள்ள உய்யம் கொண்ட சோளீசுவரமுடையாற்கும் ,சங்கு வலந்தரித்த பெருமாளுக்கும் பூசை செய்வதற்கும், அணிகலன்களுக்கும் தேவையான செலவுக்கு நிலம் தானமாக தரப்பட்டுள்ளது.
கல்வெட்டின் பின்பக்கம் 16 வரிகள் கொண்ட கல்வெட்டு பின்புறம் உள்ளது.

புதிதாக இந்த ஊரில் மக்களை குடியேற்றம் செய்து அவர்களுக்கு வசிக்க இடம் வழங்கிய செய்தியை குறிக்கிறது. காங்கேயர் என்ற வம்சத்தினர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரின் பாளையக்காரராய் இருந்து இங்கு ஆட்சி செய்ததை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது.சித்திரபானு வருடம் வைகாசி மாதம் 15ஆம் நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
சாமளு மது ஏகமுன் அய்யன் காங்கேயன் என்பவருக்கு எல்லா நன்மைகளும் வர வேண்டும் என்பதற்காக அரசரின் அறிவுரைப்படி புதிய குடிமக்களை ராயப்பனூர் நல்லூர் கிராமத்தில் குடி அமர்த்தி அவர்கள் வசிக்க கோயிலை சுற்றியுள்ள இடங்களில் இடம் கொடுத்துள்ளனர். இவர்கள் சந்திரன் உள்ள வரை அங்குள்ள சிவனுக்கும், பெருமாளுக்கும் சேவை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தியானது கல்வெட்டாகவும், செப்பு பட்டயமாகவும் தரப்பட்டுள்ளதாகவும் இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.
காங்கேயர்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் காங்கேயர்கள் என்ற பாளையக்காரர்களின் வம்சாவழியினர் இன்றும் இந்த ஊரில் வசித்து வருகிறார்கள்.
காங்குடையார் ஜமீன் என இப்போது அழைக்கப்படுகிறார்கள்.இந்த ஊரில் உள்ள அரசுப்பள்ளி, சாவடி,கொண்டிப்பட்டி போன்றவை அமைய இடம் தானமாக கொடுத்துள்ளனர்.மன்னர் காலத்தில் பயன்படுத்திய வாள்,குறுவாள்,ஈட்டி,மான்கொம்பு போன்ற போர்கருவிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ஆயுதபூசை அன்று மட்டும் இந்த ஆயுதங்களை சுத்தப்படுத்தி வழிபடுகிறார்கள்.இவர்களிடம் இருந்த செப்புபட்டயம் இப்போது திருக்கோவிலூரில் உள்ளதாகவும் சொல்கின்றனர். ராயப்பனூர் அருகே உள்ள கல்லாநத்தம் என்ற ஊரில் இவர்களின் கோட்டை இருந்ததாகவும் தற்போது அழிந்து விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
70 ஆண்டுகளுக்கு முன் வரை இவர்களுக்கு உட்பட்டிருந்த 18 கிராமங்களில் இருந்து தானியங்கள் வரியாக வசூலிக்கப்பட்டன.தற்போது அந்த வழக்கம் மறைந்து விட்டது.
இரண்டாவது கல்வெட்டு இங்குள்ள மேற்கு நோக்கிய கைலாசநாதர் கோயிலின் வலது மதிற்சுவர் அருகே ஒரு பலகை கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது.

மொத்தம் 23 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலேசுவர கிருஷ்ணதேவமஹராயருக்கு என கல்வெட்டு துவங்குகிறது. கி.பி.1518 ஆம் ஆண்டு இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.இந்த இறைவனை உய்யங்கொண்ட சோளீசுவரமுடையார் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ஸ்ரீ மது எர்ரமாஞ்சி அக்கி திம்மய்ய நாயக்கர் என்பவர் இப்பகுதியின் பொறுப்பாளராக இருந்துள்ளார். கல்வெட்டின் கீழ் பகுதி மண்ணுக்குள் இருப்பதால் என்ன தானம் கொடுத்தார்கள் என்பதை அறிய முடியவில்லை.

இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url