Search This Blog

உலகின் முதல் பெண் கணித மேதை


உலகின் முதல் பெண் கணித மேதை  ஹைபெஷா -

சிதைக்கப்பட்ட கொடூரம்:



        உலகின் முதல் பெண் கணித மேதையாக வரலாற்றில் பதிய பட வேண்டிய மா மேதை ஹைபெஷா,   மத வெறியர்களால் அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு கை, கால் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா?

       விஞ்ஞானி யூக்லிட், டொலமி, டையோஃபாந்தஸ், அப்போலோனியஸ் ஆகிய கணித மேதைகளின் நூல்களை ஆராய்ந்து , கடினமான கோட்பாடுகளை இலகுவாக எழுதி பல தத்துவ, அறிவியல், கணித நூல்களை தானே வடிவமைத்து  அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்  ஹைபெஷா  .

       இன்று நாம் வாலாற்றில் இடம் பிடித்த பெண்கள் என போற்றுவது ராணி எலிசபெத், மேரி கியூரி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ  பண்டாரநாயக்க போன்றோராக உள்ளது. ஆனால், உலகின் முதல் பெண்  கணித மேதை ஹைபெஷா   என்பது பலரறியாத உண்மை. அல்லது அவர் திட்டமிட்டு வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.



       பண்டைய எகிப்து  நாட்டின் புகழ் பெற்ற நகரம் அலெக்ஸாண்ட்ரியா (இது கிளியோபேட்ரா பிறந்த மற்றும் அவளால் மீட்டெடுக்கப்பட்ட  நகரமும் கூட) அந்நகரத்தின்  பல்கலைக்கழகத்தின் இறுதி பேராசிரியரும் சிந்தனையாளருமான  தியோனுக்கு  பிறந்தவர் தான்   ஹைபெஷா . இவர் பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லையென்றாலும்  கி.பி.350இற்கும் கி.பி.370இற்கும் இடையிலேயே ஹைபேஷா பிறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல சிறுமியாக இருந்த போதே  கணிதம், தத்துவம், வானவியல் போன்றவற்றில் இவர் கேட்கும் கேள்விகளும் விவாதங்களும் பலரை திக்கு முக்காட வைத்துள்ளது.


      பள்ளிப் படிப்பை முடித்தவுடன் கிரேக்கம், இத்தாலி, மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு உயர் கல்விக்காகச் சென்றார்  ஹைபெஷா. பல நாட்டு கல்வி, பலவித மனிதர்கள் என்று ஏராளமான அனுபவங்களுடன் மீண்டும் அலெக்ஸாண்ட்ரியா திரும்பிய இவர், அபூர்வ அறிவுத்திறமையால் கணித ஆராய்ச்சியையும் தொடர்ச்சியாக மேற்கொண்டதோடு  கிரேக்கத் தத்துவப் பள்ளியில் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற ஞானிகளின் தத்துவங்களை போதித்தார்.


       இவருடைய போதனைகள் வெறும் கல்வியாக மட்டுமின்றி மாணவர்களின் சிந்தனையை அறிவாற்றலையும் தூண்டுவதாக அமையவே ஹைபேஷாவின்  புகழ் அலெக்ஸாண்ட்ரியா முழுவதும் பரவியது. பல நாட்டு மன்னர்களும் செல்வந்தர்களும் தன் குழந்தைகளை   ஹைபெஷா  விடமே கல்வி கற்க அனுப்பினர். இதற்கிடையே பாய்மங்களின் ஒப்பிட்டு அடர்த்தியைக் கண்டறிவதற்கான ஹைட்ரோமீற்றர் கருவியையும், நட்சத்திரங்களின் தன்மையைக் கண்டறியும் ஆஸ்ட்ரோ லோப் கருவியையும் உருவாக்கினார். கணிதம், தத்துவம், அறிவியல் துறைகளில் பல நூல்களை எழுதினார்.

      தனது தேரை தானே செலுத்துதல்,  சாதாரண பெண்களை போல உடை அணியாது அறிஞர்கள் அணியும் நீண்ட அங்கியை  அணிந்து கொள்ளல், எளிமை, தெளிவாகவும் அதேவேளை அன்பாகவும்  கற்று கொடுத்தல், அறிவு, துணிவு  என்பன  ஹைபெஷாவின் அடையாளங்கள். அறிவையும் அறிவியலையும் மட்டுமே அறிந்திருந்த  ஹைபெஷாவை மத நம்பிக்கைகளோ அல்லது மூட நம்பிக்கைகளோ பெரிதாக தீண்டியிருக்கவில்லை. அப்படியான காலகட்டத்தில் ரோம பேரரசிற்கு கீழ் இருந்த எகிப்தில் மதங்கள் மீதான தீவிரம் அதிகரித்தது. கிறிஸ்தவ மதத்தினை புறக்கணிக்கும் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். கோவில்கள் ஏனைய மத ஸ்தலங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன. இம்மதவெறி அப்போதைய அலெக்ஸான்றியாவின் மதகுருவாக நியமிக்கப்பட்டிருந்த சைரிலியையும் விட்டு வைக்கவில்லை. அவர் பதவியேற்ற நாளில் இருந்தே கொடூர சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கின.

     இந்நிலையில் புகழ் பெற்றிருந்த ஹைபேஷாவின் கல்வியின் மீதும்  அவருக்கு  நண்பராகவும் ஒத்தாசையாகவும் இருந்த  அலெக்ஸான்றியாவின் ஆளுநர் ஒரிஸ்டஸ் மீதும் மதகுருவின் பார்வை திரும்பியது. இவர்கள் இருவரும் கல்வி என்ற பெயரில் மதங்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதி ஓரிஸ்டஸின் பதவியைப் பறித்தான் ஸைரிலி. 

      அத்தோடு விடாமல், மதத்துறவிகளை ஏவி, ஓரிஸ்டஸைக் கொலை செய்தான். அடுத்ததாக தான் கொலை செய்ய  வேண்டிய கொலை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது  ஹைபெஷா. அவரை மிக கொடூரமாக கொலை செய்ய  திட்டம் தீட்டி அதற்கான நாளை எதிர்பார்த்து கொண்டிருந்தான் சைரிலி .

வழமை போலவே அன்றும் மாணவர்களுக்கு கற்பித்து விட்டு தனியே தேரை செலுத்தி கொண்டு வந்தாள் ஹைபேஷா; வரும் வழியில் சைரிலியால் ஏவப்பட்ட பீட்டர் என்னும் மத குருவின் தலைமையில் வந்த கூட்டம் ,வெறி பிடித்த நாயை  போல மேதை  ஹைபெஷாவை இழுத்து  கீழே  தள்ளி சிசெரியம் எனும் ஆலயத்திற்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி ஓடுகளால் அவளை கீறி சித்ரவதை செய்து  அவரை உயிருடன் வைத்தே எரித்தது.  



     ஹைபேஷாவின் உடலுக்கு மட்டும்  அல்ல அறிவியலுக்கும் பெண்களின் அறிவு சிந்தனைகளுக்கும் சேர்த்தே அவர்கள் தீ வைத்திருந்தனர் என்பது பின்னரே புரிந்தது. ஹைபேஷாவின் மரணத்திற்கு பின்னர்  பல நூறு  ஆண்டுகள் அறிவுலகம் வளர்ச்சியடைந்தமைக்கான ஆதாரங்களோ கண்டுபிடிப்புகளோ வரலாற்றில் இல்லை எனலாம்.
      

                 அரபு படையெடுப்பால் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த நூலகமும் உலகின் முதல் ஆராய்ச்சிக்கூடமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதில் ஹைபேஷாவின் ஏராளமான நூல்கள் கருகிப்போயின. எஞ்சிய ஹைபேஷாவின் கணித நூல்கள் 8ஆம் நூற்றாண்டில் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி காலத்தில் ஹைபேஷா இறந்து எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் லத்தீன் மொழியில் வெளியானது.
       

இந்த நூல்களே பிற்காலத்தில் நியூட்டன், லீப்னிட்ஸ், டெக்கார்டே போன்ற அறிஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக  இருந்தன. ஹைபேஷா வாழ்ந்த காலத்தில் அவருக்கு இணையான அறிஞர்கள் யாரும் இல்லை என்கிறார் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் ஸ்கொலாஸ்டிகஸ் என்ற வரலாற்றுப் பேராசிரியர்!
      

     ஹைபேஷாவின் வாழ்க்கை, மத கொந்தளிப்பு, தத்துவ ஞானிகளின் வாழ்வில் இடம்பெறும் பிரச்சினைகள், அவரது கொடூர  மரணம் என்பவற்றை  2009இல் வெளியான 'அகோரா' என்ற திரைப்படம் சொல்கின்றது.  









      வானவியலாளர், கணிதவியலாளர், தத்துவவியலாளர், பேராசிரியர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என உலகின் பெண் என்பவள் எத்தனை பெரிய சக்தியாக இருக்க முடியும் என்பதை உலகிற்கு சொன்ன ஈடு இணையற்ற ஒரே பெண் ஹைபேஷாவாக மட்டுமே இருக்க முடியும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url