Search This Blog

மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள்

மன அழுத்தத்தைப் போக்கும் வழிகள்

வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும் போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் பலர்.

சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

• பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

• மகிழ்ச்சியாக இருக்கும் போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது. புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத் தான் பாருங்களேன்.

• நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது ‘எல்லாம் செய்யக்கூடும்’, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்தி தரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும் போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

• மன அழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதை விட எழுதும் போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. அந்தத் தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப் பார்க்கும் போது தீர்வை நோக்கிப் பல அடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

• அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும்.

எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும் வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

மேற்கண்ட வழி முறைகளை பின்பற்றி இனிவரும் காலங்களில் ஆவது மன அழுத்தத்தை தவிர்ப்போம். அதன் மூலம் வாழ்வை இன்பமயமாக மாற்றுவோம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url