பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண
பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண,
பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"
உரை: ஒரு பலாப்பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவென்று கண்டுபிடிக்கலாமோ எனின் அதற்குச் சொல்லுமாறு:
காம்பைச் சுற்றிலும் எண்ணிப் பார்க்க, ௱ முள்ளுக் கண்டது. இதை ௬ ஆல் பெருக்க, ௱ X ௬ = ௬௱ , இத ௫-க்கீய, ௱ X ௫ = ௫௱, ௨௰ X ௫ = ௱, ஆக ௱ ஐயும் ௨௰ ஐயும் கூட்ட ஈவு ௱௨௰ சுளை என்று சொல்வது.
விளக்கம்:
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது,
பலா பழத்திலுள்ள முற்களின் எண்ணிக்கை : 100
இதை 100 X 6 = 600,
பின்பு இந்த 600 ஐ 5 ஆல் வகுக்க, 100 X 5 = 500 , 20 X 5 = 100, ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வருகிறது, இதுவே சுளையின் எண்ணிக்கையாகும்.