பெப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள்
தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சி. வி. இராமன்:
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2013-ம் ஆண்டிற்காக, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்" (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.
வரலாறு:
இந்த தினம் கொண்டாடப்படும் வரலாறு மற்றைய தினங்களைப் போல அல்லாமல் வழக்கத்துக்கு மாறானது ஆகும்.
பொதுவாக தேசத்தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும்.
இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார்.
இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது.
அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
நோக்கம்:
எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும்,.
அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.