Search This Blog

உண்மையில் பாம்புகளைப் பற்றி பல தவறான கருத்துகள்

உண்மையிலேயே நாகப்பாம்பு அமாவாசை இரவு நேரத்தில் மாணிக்கக் கல்லைக் கீழே கழற்றி வைக்குமா? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது. சரி. அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
ஒரு நாகப்பாம்பு 100 வருடம் உயிர்வாழும் என்று சொல்கிறார்கள். அந்தப் பாம்பு தன் வாழ் நாளில் யாரையும் தீண்டாமல் இருந்தால் அதன் விஷம் இறுகிப் போய் ஒரு மாணிக்கக் கல்லாக மாறும். அந்த மாணிக்கக் கல்லை இரவு நேரங்களில் பாம்பு உமிழ்ந்துவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப் போகும் என்பது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளே. 

அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. உண்மையில் மாணிக்கக் கல் என்பது ‘அலுமினியம் ஆக்சைடு’ Aluminum Oxide (Al 2 O3). மற்றும் குரோமியம் கலந்த ஒரு கனிமப்பொருள் ஆகும்.

மாணிக்கக் கல்லை ஆங்கிலத்தில் Ruby என்று அழைக்கிறார்கள். இந்த மாணிக்கக் கல் இளம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு படிக்கக்கல் ஆகும். இயற்கையாக கிடைக்கும் மாணிக்கம் மிகத் தூய்மையாக இருக்காது.

வைரத்தை போலவே இதுவும் பட்டை தீட்டப்பட வேண்டும். கல்லின் நிறம், அமைப்பு, ஒளிரும் தன்மை, எடை ஆகியவற்றை கொண்டே அதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.

மாணிக்கம் 2050 செண்டிகிரேட் வெப்பத்தில் உருகக்கூடியது. பர்மா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, கென்யா, நேபாளம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

வைரம் (Diamond),
மாணிக்கம் (Ruby),
மரகதம் (Emerald),
வைடூரியம் (Cat’s eye),
கோமேதகம் (Hessonite),
முத்து (Pearl),
பவளம் (Coral),
புஷ்பராகம் (Topaz),
நீலம் (Sapphire)
ஆகிய இந்த ஒன்பது கற்களும் சேர்ந்துதான் நவரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. பாம்புகளுக்கு இந்த நவரத்தினக் கற்களைப் பற்றி எதுவுமே தெரியாது. பாவம் அந்தப் பாம்புகள்.

உண்மையில் பாம்புகளைப் பற்றி பல தவறான கருத்துகள் சொல்லப் படுகின்றன. பழிவாங்கும் குணம் பாம்புகளுக்கு உண்டு என்று தமிழ்ப் படங்களில் சித்தரிக்கப் படுகின்றது. சிவப்பு சேலை கட்டிய பெண்களை மாடுகள் விரட்டுவது போலத்தான் பாம்புகளுக்கும் கெட்ட பெயர். 

உண்மையில் மாடுகளுக்கு கறுப்பு வெள்ளையைத் தவிர வேறு எந்தக் கலருமே தெரியாது. அந்த மாதிரி பாம்புகளுக்கு எந்த பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாது. அதாவது அதற்கு எல்லாமே சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு மங்கலான பொருளாகத்தான் தெரியும்.

பொருட்களின் அசைவுகளைக் கொண்டுதான் மரம், செடி, ஊர்வன, பறப்பன என்று அறிந்து கொள்கிறது. ஆக, எந்தப் பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாத ஓர் ஐந்தறிவு உயிரினத்திற்கு எப்படி குறிப்பிட்ட ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

எல்லா பாம்புகளும் அசைவம் தான். ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். பாம்பு பால் குடிக்கவே குடிக்காது. தமிழ் சினிமாக்களிலும் சீரியசான சீரியல்களிலும் தான் பாம்பு பால் குடிப்பதைப் பார்க்கலாம். 

உண்மையில் எந்தப் பாம்பும் பால் குடிக்காது. மேலும் பாலைக் குடிப்பதற்க்கான எந்த ஒரு வசதியான உறுப்பு அமைப்பும் அதன் வாயில் இல்லை. அதற்கு காரணம் பாம்புக்கு நாக்கு கிடையாது.

நாக்கை போல பாம்பு வெளியே நீட்டுவது அதனுடைய மூக்கைதான். அதன் மூக்கை வைத்துதான் தன் அருகில் இருக்கும் இரையின் வாசனையை உணர்ந்து கொள்கிறது. அந்தப் பொருளின் அசைவுகளை வைத்து அது என்ன பொருள் என்பதையும் அனுமானிக்கிறது. இன்னும் ஒன்று.

பாம்பு செத்த உயிரினம் எதையுமே சாப்பிடாது. அது தவளையாக இருந்தாலும் சரி இல்லை தண்டூரிச் சிக்கனாக இருந்தாலும் சரி சாப்பிடவே சாப்பிடாது. தனக்குரிய இரை எதுவாக இருந்தாலும் அது உயிருடன் இருந்தால் மட்டுமே பாம்பு அதை விழுங்கும்.

பாம்புக்கு காது கிடையாது. ஆகையால் பாம்பு மகுடியின் இசைக்கு ஏற்ப குச்சுப்புடி ஆடுகிறது பரதநாட்டியம் ஆடுகிறது என்பது எல்லாம் சும்மா பேச்சு.

பாம்பினால் தனது வயிற்றுத் தசை மூலம் நிலத்தில் ஏற்படும் எந்த ஒரு சின்ன அதிர்வையும் உணர்ந்து கொள்ள முடியும். 100 அடி தூரத்தில் நடந்து வரும் ஒரு மனிதனின் காலடி சத்தத்தைக் கேட்ட அந்த வினாடியே அந்த இடத்தை விட்டு ஊர்ந்து சென்று விடும்.

ஆக, இனி எதிர்காலத்தில் யாராவது பாம்பு பால் குடிக்கிறது, பரதநாட்டியம் ஆடுகிறது, மாணிக்கக் கல்லைக் கழற்றிப் போடுகிறது, பழி வாங்க வாசல் கதவைத் தட்டுகிறது என்று சொன்னால்...

தயவு செய்து இங்கே நான் சொன்னதைச் சொல்லுங்கள். மீறிப் போனால் ஐயா சாலமன் பாப்பையாவைக் கூட்டி வந்து ’ஒரு பாம்பு பரநாட்டியம் ஆடுமா ஆடாதா’ என்று ஒரு பட்டி மன்றத்தை நடத்தி விடுவோம்!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url