Search This Blog

பவர் பத்திரம்

✓ ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களை, தன் சார்பாகச் செயல்பட பவர் பத்திரம் மூலம் வழங்கலாம். பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் என்று சொல்வார்கள்.

✓ ஒரு காலக்கட்டத்தில் முதன்மையாளர் கையெழுத்து மட்டும் பவர் பத்திரத்தில் போதும் என்ற நிலை மாறி தற்போது முதன்மையாளர் மற்றும் அவர் நியமிக்கும் முகவரும் கையொப்பம் இட வேண்டும் என்பது கட்டாயம்.

✓ பவர் பத்திரத்தை பொது அதிகாரப் பத்திரம், குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம் என இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வேளை பவர் பத்திரத்தில் காலத்தைக் குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லும். அதேசமயம் முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்.

பவர் பத்திர அம்சங்கள் :

சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

முதன்மையாளரின் சொத்துரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.

பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யும் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அந்த பவர் பத்திரம் ரத்து ஆகவில்லை என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் உயிருடன்தான் உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முகவருக்கு பவர் பத்திரத்தில் விற்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை பில்டர் சொத்தின் உரிமையாளராக இருந்தால், சில சமயங்களில் தங்களின் ஊழியர்களுக்கு பவர் பத்திரத்தை அளிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் அந்த பில்டரிடம் இது சரிதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஒரு வேளை முதன்மையாளர் வெளிநாட்டிலும், அவரது முகவர் இந்தியாவிலும் இருந்தால் அந்த பவர் பத்திரம் நோட்டரி அல்லது சம்பந்தப்பட்ட அந்த நாட்டில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் முதன்மையாளர் பவர் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். பவர் பத்திர முதன்மையாளர் இந்தியாவில் வசிக்கும் முகவருக்கு அதை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். முகவர் அந்த பவர் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் 120 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் அதன் செய்த பிறகுதான் வெளிநாட்டில் வாழும் முதன்மையாளர் வழங்கப்பட்ட பவர் பத்திரம் இந்தியாவில் செல்லுபடியாகும்.

கிரயப் பத்திரம் பதிவு செய்யும் முன், அசல் பவர் பத்திரத்தைச் சரி பார்க்க வேண்டும். பவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url